
| சுனன் தாரிமி இன்டெக்ஸ் |
Unicode Page |
|
மொழிபெயர்ப்பு: அபூஅம்னா முபாரக் மஸ்ஊது மதனி
பக்கம் - 3 (ஹதீஸ்கள் 21 முதல் 26 வரை)
ஹதீஸ் எண்: 21
அலி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நாம் மக்காவிலிருக்கும் போது நபியவர்களுடன் மக்காவின் எல்லைப் பகுதிக்குச் சென்றோம். அப்போது நாம் மரங்களையும் மலைகளையும் கடந்து சென்றோம். நாம் மரத்தையோ மலையையோ கடக்கும் போது 'அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் என அவை கூறாதிருக்கவில்லை' என அலி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இச்செய்தி திர்மிதியிலும், பஸ்ஸாரிலும் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் அல்வலீத் இப்னு தவ்ர் பலவீனமானவராவார். (தக்ரீப் 2-339) இபாத் இப்னு அபூயசீத் என்பவர் அறியப்படாதவராவார். (தக்ரீப் 1-394)
ஹதீஸ் எண்: 22
முஸைனா அல்லது ஹுஸைனா கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகிறார்.
நபி (ஸல்) அவர்கள் சுபஹுதொழுதார்கள். அப்போது நூறு ஓநாய்கள் ஒரு ஓநாய்க் கூட்டத்தைத் தடுத்துக் கொண்டிருந்தன. நபி (ஸல்) அவர்கள் தடுக்கும் ஓநாய்க் கூட்டத்தைப் பார்த்து உங்களது உணவில் சிலவற்றைக் கொடுங்கள். அதன் மூலம் மீதமுள்ளவற்றை நீங்கள் பாதுகாக்கலாம் என்றார்கள். அவைகள் தமது தேவையை முறையிட்டன. நபியவர்கள் அவற்றை அனுமதியுங்கள், அனுமதியுங்கள் எனக் கூறவே ஊளையிட்டவையாக அவ்விடம் விட்டகன்றன.
ஹதீஸ் எண்: 23
மக்கத்து குறைஷிகளின் தாக்குதலால் இரத்தம் தோய்ந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் கவலையுடன் அமர்ந்திருந்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு நான் ஏதேனும் அத்தாட்சியைக் காட்ட வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா? எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ஆம் எனக் கூறி தனக்குப் பின்னால் உள்ள ஒரு மரத்தைப் பார்த்தார்கள். அதனை அழையுங்கள் என ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறவே நபியவர்கள் அதனை அழைத்தார்கள். அது வந்து நபி (ஸல்) அவர்கள் முன்னால் நின்றது. 'நீங்கள் அதைத் திரும்பிப் போகச் சொல்லுங்கள்' என ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறவே நபியவர்களும் போகச் சொன்னார்கள். அதுவும் (அதன் இடத்திற்குத்) திரும்பிச் சென்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் எனக்குப் போதும், போதும் என்றார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஹதீஸ் எண்: 24
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பனூ ஆமிர் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரிடம், 'உமக்கு ஓர் அத்தாட்சியைக் காட்டட்டுமா?' என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். வந்தவர், 'ஆம்! காட்டுங்கள்' என்று கூறினார். அதற்கு, 'நீ போய் அந்த ஈத்த மரத்தை அழை!' என்று கூறினார்கள். அவரும் அழைத்தார். அம்மரம் அவர் முன்னால் பாய்ந்து வந்தது. அதனை திரும்பிச் செல்லும்படி கூறுமாறு அவர் கேட்டார். மரத்தைப் பார்த்து, 'திரும்பிச் செல்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அது இருந்த இடத்திற்கு திரும்பிச் சென்றது. உடனே அம்மனிதர், 'பனூ ஆமிர் கோத்திரத்தினரே! இன்று நான் கண்ட இந்த மனிதரை விட தேர்ந்த ஒரு மந்திரவாதியை நான் பார்த்ததே இல்லை' என்று கூறினார்.
பாடம்: 5 வரலிடுக்களிலிருந்து நீரூற்றை ஏற்படுத்தி நபியை அல்லாஹ் சங்கைப்படுத்தல்
ஹதீஸ் எண்: 25
நபி (ஸல்) அவர்கள் (தண்ணீர்த் தேவைக்காக) பிலால் (ரலி) அவர்களை அழைத்தார்கள். தண்ணீரைத் தேடிய பிலால் (ரலி) பின்னர் நபியிடம் வந்து அல்லாஹ்வின் மீது சத்தியமாக தண்ணீர் இல்லை என்றார்கள். அப்போது நபியவர்கள் தண்ணீர் வைக்கும் தோற்பை ஏதும் உள்ளதா என்றார்கள். பிலால் ஒரு பையை எடுத்து வந்தார். அதற்குள் நபியவர்கள் தனது கையை விரித்து வைத்தார்கள். அவர்களுக்கு கைகளுக்கு கீழிருந்து ஒரு நீரூற்று வந்தது. இப்னு மஸ்வூத் (ரலி) அதனைப் பருகினார்கள். மற்றவர்கள் அதில் வுழூச் செய்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இது தபரானியிலும் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் தாயிப்னு ஸாயித் என்பவர் குழப்பமுற்றவராவார்.)
ஹதீஸ் எண்: 26
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
சுமார் 210 க்கும் மேற்பட்ட நபர்களுடன் நாமும் நபி (ஸல்) அவர்களும் அவ்ஸ் கோத்திரத்தினருடன் சண்டை செய்யச் சென்றோம். அப்போது தொழுகைக்குரிய நேரம் வந்தது. நபி (ஸல்) அவர்கள் யாரிடமாவது வுழூச் செய்ய தண்ணீர் உள்ளதா எனக் கேட்டார்கள். ஒரு மனிதர் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீருடன் விரைந்து வந்தார். வேறு எவரிடமும் தண்ணீர் இருக்க வில்லை. நபி (ஸல்) அவர்கள் அந்தப் பாத்திரத்திலிருந்து தண்ணீரை ஒரு பானைக்குள் ஊற்றிவிட்டு அழகிய முறையில் சம்பூரணமாக வுழூச் செய்தார்கள். பின்னர் பானையை விட்டு விட்டு நகர்ந்தார்கள். அப்போது நபித்தோழர்கள் போட்டி போட்டுக் கொண்டு பானையை நோக்கி வந்தனர். நீரைத் தொட்டுத் தடவுங்கள் (கழுவ வேண்டாம்) எனக் கூறிக் கொண்டனர்.
இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் சற்றுப் பொறுங்கள் எனக் கூறி கையை தண்ணீர் உள்ள பானையில் பிஸ்மில்லாஹ் எனக் கூறி வைத்தார்கள். பின்னர் நீங்கள் அழகாக வுழூச் செய்யுங்கள் என்றார்கள்.
அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி (ஸல்) அவர்களின் விரல்களிலிருந்து நீருற்றுக்கள் வருவதை என் கண்களால் நான் கண்டேன். அனைவரும் வுழூச் செய்யும் வரை நபி (ஸல்) அவர்கள் கையை உயர்த்தவே இல்லை.
(இந்த நபிமொழி அஹ்மதிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.).
நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்