
| சுனன் தாரிமி இன்டெக்ஸ் |
Unicode Page |
|
மொழிபெயர்ப்பு: அபூஅம்னா முபாரக் மஸ்ஊது மதனி
பக்கம் - 2 (ஹதீஸ்கள் 11 முதல் 20 வரை)
ஹதீஸ் எண்: 11
(மிஃராஜ் பயண ஆரம்பத்தில்) நபி (ஸல்) அவர்கள் கொண்டு வரப்பட்டு அவருக்கு, உன்கண்கள் உறங்கும், உன்செவிகள் கேட்கும், உன் உள்ளம் உணரும் எனக் கூறப்பட்டது. (அத்துடன்) என்கண்கள் உறங்கின, செவிகள் கேட்டன, உள்ளம் உணர்ந்தது. (அப்போது எனக்கு) ஒரு தலைவன் வீட்டைக் கட்டினான். ஒரு விருந்தை ஏற்பாடு செய்து அதற்காக அழைக்கும் ஓர் அழைப்பாளனையும் அனுப்பினான். அழைப்பாளனின் அழைப்பை ஏற்று, இல்லத்தில் நுழைந்தவர்கள் விருந்துண்டனர். அந்தத் தலைவன் அவர்களைப் பொருந்திக் கொண்டான். எவர்கள் அழைப்பை ஏற்று வீட்டினுள் நுழையவில்லையோ அவர்கள் விருந்தை உண்ணவில்லை. அத்தலைவனின் அதிருப்திக்கும் ஆளாகினர் என்று எனக்குக் கூறப்பட்டது எனக் கூறிவிட்டு 'அல்லாஹ் தான் அந்தத் தலைவன், முஹம்மது தான் அந்த அழைப்பாளன், இஸ்லாமே அந்த இல்லம், சுவனமே அந்த விருந்து என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இவ்வாறு ரபீஅல் ஜுர்ஸி கூற அதிய்யா செவியேற்றார்.
(இந்நபிமொழி தபரானியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.)
ஹதீஸ் எண்: 12
அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள், இப்னு மஸ்வூது (ரலி) அவர்களுடன் பத்ஹா என்ற இடம் நோக்கிச் சென்றார்கள். (அங்கு ஓர் இடத்தில்) இப்னு மஸ்வூது (ரலி) அவர்களை அமரச் செய்து அவரைச் சுற்றி கோடு கீறி விட்டு 'நீ இவ்விடத்தைத் தாண்டவே கூடாது' உன்னிடத்தில் சில மனிதர்கள் வருவார்கள். அவர்களுடன் நீ பேச வேண்டாம். அவர்களும் உம்முடன் பேசமாட்டார்கள் எனக் கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள் தான் நாடும் இடத்திற்குச் சென்றார்கள்.
பின்னர் சில மனிதர்கள் கோட்டினருகே வந்து அதைத் தாண்டாதிருந்தார்கள். பின்னர் நபியவர்கள் சென்ற இடத்தை நோக்கி அவர்களும் சென்றார்கள். இரவின் கடைசிப்பகுதியில் நபியவர்கள் என்னிடம் வந்து என் மடியில் தலைவைத்து உறங்கினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் எனது மடியில் துயில் கொண்டிருக்கையில் வெள்ளை உடைதரித்த ஒட்டகம் போன்ற (சில) மனிதர்கள் என்னிடம் வந்தார்கள். அவர்கள் எத்தகைய அழகை உடையவர்கள் என்பதை அல்லாஹ்தான் அறிவான். அவர்களில் சிலர் நபியின் தலைப்பகுதியிலும் மற்றும் சிலர் கால்மாட்டிலும் அமர்ந்து பின்வருமாறு தமக்குள் உரையாடிக் கொண்டனர்.
இவரது கண்கள் உறங்கினாலும் உள்ளம் விழித்துக் கொண்டேயிருக்கும். இவ்விதம் இந்நபியைத் தவிர வேறு எந்த அடியாருக்கும் (அருள்) வழங்கப்பட்டதை நாம் கண்டதேயில்லை. ஒரு தலைவன் மாளிகையொன்றைக் கட்டி ஒரு விருந்தை ஏற்பாடு செய்து, அந்த உணவை உண்ணவும், பானத்தைப் பருகவும் மக்களை அழைத்தான் என்பதை இவருக்கு உதாரணமாகக் கூறலாம். (இவ்வாறு பேசிக்கொண்டிருந்தவர்கள்) எழுந்து சென்று விட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் கண்விழித்து இவர்கள் யாரென்று உனக்குத் தெரியுமா? எனக் கேட்க, நான் அல்லாஹ்வும் அவன் தூதருமே அறிவர் என்றேன். இவர்கள் மலக்குகள் எனக் கூறிவிட்டு, அவர்கள் கூறிய உதாரணம் என்னவென்று தெரியுமா எனக் கேட்டார்கள். அதற்கும் அல்லாஹ்வும் அவன் தூதருமே அறிவர் என்றேன். ரஹ்மான் சுவனத்தைக் கட்டினான். அதன்பால் அடியார்களை அழைத்தான். எவர் அவ்வழைப்பிற்கு பதிலளித்தாரோ அவர் அச்சுவனத்தில் நுழைந்து விட்டார். எவர் பதிலளிக்க வில்லையோ அவரை அவன் நோவினை செய்து தண்டிப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஉஸ்மான் அந்நஹ்தி அறிவிக்கின்றார்.
(இச்செய்தி புகாரி, திர்மிதி ஆகிய கிரந்தங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.)பாடம்: 3 நபி (ஸல்) அவர்களின் ஆரம்ப நிலை
ஹதீஸ் எண்: 13
நபி (ஸல்) அவர்களிடம் 'தங்களது ஆரம்ப நிலை எவ்வாறு இருந்தது' என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'பனூ ஸஅத் கோத்திரத்தாரைச் சேர்ந்த (ஹலீமா என்றே பெண்ணே) என் வளர்ப்புத் தாயாவார். (ஒரு நாள்) நானும் அவளுடைய மகனும் எங்களுக்குரிய ஆடுகளை மேய்க்கச் சென்றோம். நாங்கள் எங்களுடன் உணவு எதனையும் எடுத்துச் சென்றிருக்கவில்லை. நான், சகோதரனே! நம் தாயிடம் சென்று நமக்கு உணவு எடுத்து வா என்றேன். என் சகோதரனும் சென்று விட்டான். நான் ஆடுகளுடன் இருந்தேன். அப்போது கழுகைப் போன்ற இரண்டு வெள்ளைப் பறவைகள் வந்தன.
அதில் ஒன்று மற்றதைப் பார்த்து 'இவரா அவர்?' என்றதும் மற்றது 'ஆமாம்' என்றது. (உடனே) அவை இரண்டும் என்னிடம் வந்தன. என்னை மல்லாக்கப் புரட்டி என் வயிற்றைப் பிளந்து என் 'கல்பை' வெளியே எடுத்தன. அதனைப் பிளந்து இரண்டு கருப்பு இரத்தக் கட்டிகளை வெளியே எடுத்தன. பனித் தண்ணீரைக் கொண்டுவா என ஒன்று மற்றதிடம் கூறி அதன் மூலம் எனது உள்ளத்தைக் கழுவின. பின்னர் குளிர்ந்த நீரைக் கொண்டுவா எனக் கூறி அதன் மூலம் என் கல்பைக் கழுவின. பின்னர் ஸகீனத் (எனும் அமைதி) எனது உள்ளத்தில் வைக்கப்பட்டது. பின்னர் ஒன்று மற்றதிடம் 'இவரது வயிற்றைத் தை' என்றதும் தைக்கப்பட்டது. அதன் பின் இறுதி நுபுவ்வத்திற்கான முத்திரை குத்தப்பட்டது.
பின்னர் இவரை ஒரு தட்டிலும் இவரது உம்மத்தில் ஆயிரம் பேரை ஒரு தட்டிலும் வை என்று கூறப்பட்டது. அப்போது நான் எனக்கு மேலே பார்த்தேன். அந்த ஆயிரம் பேரும் மேல் எழுந்து இருந்தனர். அவர்களில் சிலர் என் மீது வீழ்ந்து விடுவார்களோ என்று பயந்தேன். அவற்றில் ஒன்று, இவரது முழு உம்மத்தையும் இவரையும் நிறுத்தாலும் இவரே கனமாக இருப்பார் எனக் கூறி என்னை விட்டுவிட்டுச் சென்று விட்டன. நான் கடுமையாகப் பயந்து விட்டேன். பின்னர் (வளர்ப்புத்) தாயிடம் சென்று எனக்கு நிகழ்ந்தவைகளைக் கூறினேன். எனக்கு ஏதேனும் ஏற்பட்டு விடுமோ என என் (வளர்ப்புத்) தாய் (ஹலீமா) அஞ்சி 'அல்லாஹ்விடம் உனக்காகப் பாதுகாவல் தேடுகிறேன்' என்றார்கள்.
பின்னர் அவர்கள் ஒட்டகத்தைத் தயார்செய்து அதில் என்னையும் ஏற்றி எனக்குப் பின்னால் அவர்களும் ஏறி என்னை என் தாய் (ஆமினா)விடம் கொண்டு சென்று 'இதோ என் அமானிதத்தை நான் பேணிவிட்டேன்' எனக் கூறி என்னை ஒப்படைத்து எனக்கு நடந்ததைக் கூறினார். எனினும் அது என் தாயை திகிலடையச் செய்ய வில்லை. என் தாய் (ஆமினா) அவர்கள் 'இவனை நான் பெற்றெடுத்த போது என்னிடமிருந்த ஒரு ஒளி வெளியேறியதனால் ஷாமின் கோட்டை ஒளிமயமானதைக் கண்டேன்' என்று பதிலளித்தார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உபதிப்னு அப்துஸ் ஸலமீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.ஹதீஸ் எண்: 14
நீங்கள் இறைச் செய்தியைப் பெற்றிருந்த போது நீங்கள் நபி என்பதை எப்படி அறிந்து கொண்டீர்கள்? என நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அபூதர்ரே! நான் மக்காவில் கட்டடங்கள் இல்லா பகுதியில் இருக்கும் போது இரு மலக்குகள் வந்தனர். ஒருவர் பூமியிலும் மற்றவர் வானத்திற்கும் பூமிக்குமிடையிலும் இருந்தனர். ஒருவர் மற்றவரிடம் இவரா அவர் என்றார். மற்றவர் ஆம் என்றார். இவருடன் ஒருவரை நிறுங்கள் எனக் கூறப்பட்டு நிறுக்கப்பட்டது. நானே கனத்தேன். பின்னர் பத்துப் பேருடன் நிறுக்கப்பட்டது அப்போதும் நானே கனத்தேன். இவரை நூறு பேருடன் நிறுங்கள் என்றார் ஒருவர் நான் நிறுக்கப்பட்டேன். பின்னர் ஆயிரம் பேருடன் நிறுங்கள் என்று கூறப்பட்டது. அப்போது தராசின் ஒரு பக்கம் மேலே எழுந்து அவர்களில் சிலர் என்மீது கொட்டப்படுவார்கள் போலிருந்தது. இவரை இவரது உம்மத்துக்கள் அனைவருடன் நிறுத்தாலும் இவரே கனப்பார் என ஒருவர் மற்றவரிடம் கூறினார் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் கிபாரி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இந்தச் செய்தி பஸ்ஸாரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.)
ஹதீஸ் எண்: 15
'மக்களே! நிச்சயமாக நான் நேர்வழி பெற்ற அருட்கொடையாக இருக்கின்றேன்' என அழைப்போராக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள் என அபூஸாலிஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அறிவிப்பாளர் தொடரில் ஸஹாபி விடுபட்டுள்ளதால் இது 'முர்ஸல்' எனும் வகையைச் சார்ந்த அறிவிப்பாகும். இச்செய்தி பஸ்ஸாரிலும், தப்ரானி ஸகீரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.)
ஹதீஸ் எண்: 16
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது (எம்மை) நோக்கி ஒரு அஃராபி வந்து கொண்டிருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களை நெருங்கிய போது 'நீர் எங்கே போகிறீர்' என நபி (ஸல்) அவர்கள் அவரிடம் கேட்க, அவர் தான் தனது வீட்டிற்குச் செல்வதாகக் கூறினார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் 'என்மூலம் உனக்கேதேனும் நலவு உண்டாக வேண்டுமென நீர் விரும்புகிறீரா?' எனக் கேட்டார்கள். அதற்கவர் என்ன நலவு? என்றார். அதற்கு நபியவர்கள் 'வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன், அவனுக்கு இணை துணை இல்லை. முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் அடிமையும் தூதருமாவார் என சாட்சி சொல்ல வேண்டும்.' என்றார்கள். (இதைக் கேட்ட அவர்) நீங்கள் கூறுவதற்கு யார் சாட்சி என்று வினவினார். அதற்கு நபியவர்கள் இந்த மரம் எனக்கூறி (குறிப்பிட்ட) அந்த மரத்தை அழைத்தார்கள். ஓடையின் ஓரத்திலிருந்து அந்த மரம் பூமியைப் பெயர்த்துக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் முன்னால் வந்து நின்றது. நபி (ஸல்) அவர்கள் சாட்சி கூறுமாறு மூன்று விடுத்தம் வேண்ட அதுவும் நபியவர்கள் வேண்டியவாறு மூன்று விடுத்தம் சாட்சி சொன்னது. பின்னர் அது தன் இடத்திற்குத் திரும்பிச் சென்றது. (இதனைக் கண்ட அந்த அஃராபி) என் கூட்டத்தினர் என்னைப் பின்பற்றினால் அவர்களை உங்களிடம் அழைத்து வருவேன். இன்றேல் நான் (தனியாகவேனும்) உங்களுடன் வந்து தங்கிவிடுவேன் எனக் கூறிவிட்டு தன் கூட்டத்தினரை நோக்கிச் சென்றார்.
(இச் செய்தி பஸ்ஸார் (2411), தப்ரானி ஆகிய கிரந்தங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.)
ஹதீஸ் எண்: 17
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், 'நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணம் சென்றேன். நபியவர்கள் (பயணத்தில்) எவர் கண்ணுக்கும் எட்டாத இடத்திலே தான் மலம் கழிப்பார்கள். மரமோ, மலையோ அற்ற ஒரு பாலை நிலத்தை நாம் அடைந்தோம். 'ஜாபிரே! உன் தோல்பையில் நீரைக் கொண்டுவா' என்றார்கள்.
ஜாபிர்: நாம் எவரும் காணாத இடம் தேடிச் சென்றோம். அங்கே நாலு முழ இடைவெளியுடன் கூடிய இரண்டு மரங்கள் காணப்பட்டன.
நபி (ஸல்): ஜாபிரே! இந்த மரத்திடம் சென்று நீங்கள் இவர் உங்களுக்குப் பின்னால் இருப்பதற்காக ஒன்றுடன் ஒன்று சேர்ந்து கொள்ளுங்கள் என நான் கூறியதாகக் கூறுவீராக!
(ஜாபிர் (ரழி) கூறியதும்)
அவைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்தன. நபி (ஸல்) அவர்கள் அவற்றுக்குப் பின்னால் தன் தேவையை முடித்தார்கள். பின்னர் உரிய இடத்திற்கு அவைகள் சென்றன.
பின்னர் நாம் நபியுடன் பயணத்தை மேற்கொண்டோம். பறவையைப் போன்ற ஒன்று எமக்கு நிழல் தந்து கொண்டிருந்தது. அவ்வேளை தனது கையில் குழந்தையுடன் தென்பட்ட ஒரு பெண் நபியவர்களை நோக்கி 'அல்லாஹ்வின் தூதரே! எனது இந்த மகனை ஒவ்வொரு நாளும் மூன்று விடுத்தம் ஷைத்தான் பிடித்து விடுகிறான்' எனக் கூறினார்.
நபி (ஸல்) அவர்கள் அக்குழந்தையை எடுத்து வாகனத்தின் முன்பக்கத்தில் வைத்துக் கொண்டு
'அல்லாஹ்வின் விரோதியே! (வெளியே) போய்விடு! நான் அல்லாஹ்வின் தூதராவேன்' என மூன்று விடுத்தம் கூறினார்கள். பின்னர் குழந்தையை அவளிடம் கொடுத்தார்கள். பின்னர் நாம் பயணத்தை முடித்து திரும்பி வரும் போது அந்த இடத்தை அடைந்தோம். அதே பெண் கையில் குழந்தையுடன் ஆடுகளைச் சாய்த்துக் கொண்டு வந்தாள். 'அல்லாஹ்வின் தூதரே! இந்த (ஆடுகளை) அன்பளிப்பாக ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பியவன் மீது ஆணையாக! அவன் மீண்டும் வரவே இல்லை' என்றாள். அதற்கு நபியவர்கள் (எம்மைப் பார்த்து) அவற்றில் ஒன்றை எடுத்து விட்டு மற்றதை அவளிடமே திருப்பிக் கொடுங்கள் என்றார்கள். பின்னர் பறவை போன்ற ஒன்று நிழல் தர நாம் நபியுடன் சென்றோம். செல்லும் போது ஒரு ஒட்டகம் கத்திக் கொண்டு வந்து நபியின் முன்னால் சுஜுதில் விழுந்தது. நபி (ஸல்) அவர்கள் மக்களைப் பார்த்து இந்த ஒட்டகம் யாருடையது? என்று கேட்டார்கள். சில அன்ஸாரிய இளைஞர்கள் இது எம்முடையது அல்லாஹ்வின் தூதரே! என்றார்கள். இதன் நிலை என்ன என்று அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்க,'20 வருடங்களாக உணவு கொடுத்து வளர்த்து வருகின்றோம். அது கொழுத்து விட்டது. எனவே அதனை அறுத்து எமக்கு மத்தியில் பங்கிடுவதற்கு நாம் விரும்பினோம். இது எம்மை விட்டும் தப்பி ஓடி விட்டது' என்றனர். இதை எனக்கு விற்றுவிடுங்கள் என நபியவர்கள் கேட்க, (இல்லை) இல்லை எமது அன்பளிப்பாகவே இதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றனர். அதற்கு நபியவர்கள் 'அது எனக்குரியதென்றால் அதன் காலம் வரும் வரை அதை நல்ல முறையில் பராமரியுங்கள்' என்றார்கள். அப்போது (சூழ இருந்த) முஸ்லிம்கள் அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகளைவிட உங்களுக்கு சுஜுது செய்ய நாமே தகுதியுடையவர்கள் எனக் கூறினர். அதற்கு நபியவர்கள் எதுவும் எதற்கும் சுஜுது செய்யக் கூடாது. அப்படி கூடும் எனில் கணவனுக்கு மனைவிகள் சுஜுது செய்வது அனுமதிக்கப்பட்டிருக்கும் என்றார்கள்.
(இச்செய்தி தபரானி அவ்ஸத்திலும், பஸ்ஸாரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.)
ஹதீஸ் எண்: 18
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'நாம் நபி (ஸல்) அவர்களுடன் பயணிக்கும் போது பனூ நஜ்ஜார் கோத்திரத்தாருக்குரிய ஒரு தோட்டத்தின் பக்கம் சென்றோம். அங்கே இருந்த (குழப்பமுற்ற) ஒரு ஒட்டகம் தோட்டத்தின் பக்கம் செல்வோரை எதிர்த்து(த் தாக்கி)க் கொண்டிருந்தது. இது பற்றி அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறிய போது நபியவர்கள் அங்கே வந்து அந்த ஒட்டகத்தை அழைத்தார்கள். அது நபியவர்களின் முன்னிலையில் கீழ் உதடு பூமியில் படும் வண்ணம் (பணிவுடன்) அமர்ந்தது. நபியவர்கள் கடிவாளத்தை வரவழைத்து அதனைக் கட்டி ஒட்டகத்தின் உரிமையாளரிடம் ஒப்படைத்தார்கள். பின்னர் திரும்பிப் பார்த்து, 'ஜின்களிலும் மனிதர்களிலுமுள்ள கெட்டவர்களைத் தவிர, வானுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட இடத்தில் இருக்கும் எதுவும் நான் அல்லாஹ்வின் தூதர் என்பதை அறியாமலில்லை' எனக் கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் 'அஜ்லஹ்;;' என்பவரின் நம்பகத்தன்மையில் பல இமாம்கள் குறைகாண்கின்றனர். (தஹ்தீப் 1-189,190) இச்செய்தி அஹ்மதிலும் இடம் பெற்றிருப்பினும் அதன் அறிவிப்பாளர் தொடரிலும் சில குறைபாடுகள் காணப்படுகின்றன. (மஜ்மஉல் ஸவாஇத் 9-7)
ஹதீஸ் எண்: 19
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'ஒரு பெண் தனது மகனை நபியவர்களிடம் கொண்டு வந்து இவனுக்குப் பைத்தியம் பிடித்துள்ளது. அது பகல் இரவு உணவு நேரங்களில் அதிகரிக்கின்றது. அப்போது எமது உணவை அவன் அசிங்கப்படுத்தி விடுகிறான்' என்று முறையிட்டாள். நபி (ஸல்) அவர்கள் அவனின் நெஞ்சைத் தடவி துஆச் செய்தார்கள். அவன் வாந்தியெடுத்தான். அப்போது அவனது தொண்டையிலிருந்து கறுப்பு ஈத்தம் காய் போன்ற ஒன்று வெளியாகியதும் அவன் குணம் பெற்றான்.
(அஹ்மத், தபரானி ஆகிய கிரந்தங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ள இச்செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் குறைகளுள்ளன. பார்க்க: அல்பானியின் தஹ்ரீஜுல் மிஷ்காத் 3, ஹதீஸ் எண் 5923)
ஹதீஸ் எண்: 20
ஜாபிர் இப்னு ஸம்ரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
மக்காவிலுள்ள ஒரு கல் நான் நபித்துவத்தைப் பெறுமுன்னரே எனக்குச் சலாம் உரைத்தது. தற்போதும் அக்கல்லை நான் அறிவேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(இந்த ஹதீஸ் முஸ்லிம், திர்மிதி, அஹ்மத் ஆகிய கிரந்தங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது).
நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்