
| சுனன் தாரிமி இன்டெக்ஸ் |
Unicode Page |
|
மொழிபெயர்ப்பு: அபூஅம்னா முபாரக் மஸ்ஊது மதனி
பக்கம் - 1 (ஹதீஸ்கள் 1 முதல் 10 வரை)
பாடம்: 1 நபி (ஸல்) அவர்கள் அனுப்பப்படுவதற்கு முன் மக்களிடம் இருந்த அறியாமையும் வழிகேடும்
ஹதீஸ் எண்: 1
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ஒரு மனிதன் அறியாமைக் காலத்தில் செய்த (பாவத்தி)ற்காக (அல்லாஹ்விடத்தில் குற்றம்) பிடிக்கப்படுவானா? என்று வினவினார்.
(அதற்கு) 'யார் இஸ்லாத்தில் (இணைந்து) சிறந்து விளங்குகிறாரோ அவர் அறியாமைக் காலத்தில் செய்த (பாவத்)திற்காக (அல்லாஹ்விடத்தில் குற்றம்) பிடிக்கப்பட மாட்டார். இன்னும் இஸ்லாத்தில் இணைந்த பின்னரும் பாவங்களைச் செய்கிறாரோ அவர் முதலில்; செய்ததற்கும் பின்னர் செய்ததற்கும் பிடிக்கப்படுவார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஹதீஸ் எண்: 2
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் வந்து, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நாங்கள் (முன்பு மார்க்கத்தை) அறியாதவர்களாகவும், சிலைகளை வணங்குபவர்களாகவும் இருந்தோம். அதன் காரணமாக குழந்தைகளை கொலை செய்து கொண்டிருந்தோம். என்னிடத்தில் எனக்கு ஒரு மகள் இருந்தாள் நான் அவளை அழைக்கும் போதெல்லாம் என்னுடைய அழைப்பிற்கு மகிழ்வோடு பதில் கூறிக் கொண்டிருந்தாள். ஒரு நாள் நான் அவளை அழைத்துக் கொண்டு என்னுடைய வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றுக்குச் சென்றேன். அவளும் என்னை பின் தொடர்ந்து வந்தாள். அங்கு நான் அவள் கையைப் பிடித்து கிணற்றில் தள்ளி விட்டேன். அவள் எனதருமை தந்தையே! எனதருமை தந்தையே! என்று கதறிக் கொண்டிருந்தது தான் என்னை அடைந்த அவளின் கடைசி வார்த்தையாகும் என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அழுதார்கள். அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்து சென்று கொண்டிருந்தது. இதைக் கண்ட நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் அமர்ந்திருந்த ஒருவர் நீர் நபி (ஸல்) அவர்களை கவலையில் ஆழ்த்தி விட்டீரே! என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அம்மனிதரிடம் 'நீர் பொறும்! அவருக்கு ஏற்பட்டுள்ள வருத்தத்தை வைத்து அவர் மிக முக்கியமான பிரச்சனையை கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள். பின்பு (அம்மனிதரிடம்) உம்முடைய அச்சம்பவத்தை மறுபடியும் கூறுவீராக! என்று கூறினார்கள். அவர் அதை மறுபடியும் கூறினார். தனது கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து தனது தாடியின் மீது வழிந்தோடும் அளவிற்கு நபி (ஸல்) அவர்கள் அழுதார்கள். பின்பு அவரிடம் 'நிச்சயமாக அல்லாஹ் மனிதன் அறியாமைக் காலத்தில் செய்த செயல்களை அகற்றி விட்டான் உம்முடைய செயல்களை புதிதாக ஆரம்பித்து செய்து வருவீராக' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஹதீஸ் எண்: 3
தன்னிடம் தன் அடிமை கூறியதாக முஜாஹித் அவர்கள் அறிவிக்கிறார்கள். என்னுடைய குடும்பத்தார் தங்களுடைய தெய்வங்களுக்கு படைப்பதற்காக என்னிடம் வெண்ணையும் பாலும் நிறைந்த பாத்திரத்துடன் என்னை அனுப்பினார்கள். (கடவுளர்களுக்கு படைத்திருந்ததால்) பயம் என்னை அதை உண்ணுவதை விட்டு தடுத்தது. (அதை அவர் அங்கு சென்று வைத்த பின்பு) ஒரு நாய் வந்து வெண்ணையை தின்று பாலை குடித்து விட்டது. பின்பு இஸாஃபு, நாயிலா எனும் அச்சிலையின் மீது சிறுநீர் கழித்து விட்டது.
'அறியாமைக் காலத்தில் ஒருவன் பயணம் சென்றால் தன்னுடன் நான்கு கற்களை எடுத்துக் கொள்வான். மூன்று அடுப்பு கூட்டுவதற்காகவும் ஒன்று அவன் அதை வணங்குவதற்காகவும் இன்னும் அவன் தன் நாயை (பேணி) வளர்த்து கொண்டும் தன்னுடைய குழ்ந்தையை கொன்று கொண்டுமிருந்தான்' என்று ஹாரூன் அவர்கள் கூறினார்கள்.ஹதீஸ் எண்: 4
அபூரஜாஃ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நாங்கள் அறியாமைக் காலத்தில் ஒரு அழகான கல்லைக் கண்டு விட்டால் உடனே அதை வணங்கி விடுவோம். கல் ஏதும் கிடைக்கவில்லை என்றால் மணலை கூட்டி குவிப்போம், பின்பு நன்றாக பால் தரக்கூடிய ஒட்டகையைக் கொண்டு வந்து அதன் கால்களை அகற்றச் செய்து அம்மணல் குவியல் நன்றாக நணையும் வரை அதன் மீது பாலை கறந்து விடுவோம். பின்பு அந்த இடத்தில் தங்கி இருக்கும் காலங்களில் அக்குவியலை வணங்குவோம்.
பாடம்: 2 முன்னைய வேதங்களில் நபி (ஸல்) பற்றிய வர்னணை
ஹதீஸ் எண்: 5
கஃப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் பற்றிப் பின்வருமாறு (எமது வேதத்தில்) எழுதப்பட்டிருக்கக் கண்டேன்.
அவர் கடின சித்தம் உடையவராகவோ, முரட்டுத்தனம் உடையவராகவோ, கடைவீதிகளில் கத்திப் பேசி சச்சரவுகளில் ஈடுபவராகவோ இருக்க மாட்டார். தீமைக்குப் பதிலாக தீமை செய்ய மாட்டார். மாறாக மன்னித்து கண்டு கொள்ளாது விட்டு விடுவார். அவரது சமூகமோ புகழக் கூடியவர்களாகவும், உயர்ந்த இடங்களில் அல்லாஹ் மிகப்பெரியவன் என்று தக்பீரும், பள்ளங்களில் புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே என்று தஹ்மீதும் கூறுவர். அவர்கள் நீதம் கேட்பவர்களுக்கு உதவி செய்வார்கள். அவர்கள் (தொழுகைக்காக) உலூச் செய்வார்கள். அவர்களின் அறிவிப்பாளரின் அறிவிப்பு வான் வெளியில் ஒலிக்கும். யுத்தத்தில் அவர்கள் அணியாக நிற்பதும் தொழுகையில் அணியாக இருப்பதும் சமமானதே! இரவில் அவர்களுக்கு தேனியின் ரீங்காரம் போன்ற ஓசையுண்டு! (முஹம்மத்) அவர்களின் பிறப்பு மக்காவிலாகும். அவரின் ஹிஜ்ரத்தளம் தீபா (மதீனா) வாகும். அவரது ஆட்சி சிரியா (வரையில்) இருக்கும்.ஹதீஸ் எண்: 6
இப்னு ஸல்லாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வர்ணணைகள் பற்றி முந்தைய வேதத்தில் பின்வருமாறு பதியப்பட்டதை நாம் கண்டோம் எனக் கூறுபவராக இருந்தார்.
நபியே! நிச்சயமாக உன்னை சாட்சியமளிப்பவராகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிப்பவராகவும், எழுதப்படிக்கத் தெரியாத பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம். நீர் எனது அடிமையும், துதருமாவீர். தனது எல்லாக் காரியங்களிலும் அல்லாஹ்வையே நம்பியவர் (முதவக்கில்) என்று உமக்கு நான் பெயருட்டுள்ளேன்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் கடின சுவாபம் கொண்டவராகவோ, முரட்டுத்தனம் உடையவராகவோ, கடைவீதிகளில் கத்திப் பேசி சச்சரவுகளில் ஈடுபவராகவோ இருக்க மாட்டார். தீமையைக் கொண்டு தீமையைத் தடுக்க மாட்டார். மாறாக மன்னித்து கண்டு கொள்ளாது விட்டு விடுவார். அவர் மூலம் வளைந்த மார்க்கத்தை நிமிர்த்தும் வரை அல்லாஹ் அவ(ரது உயி)ரைக் கைப்பற்ற மாட்டான். மக்கள் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று சாட்சி கூறுவர். அதன் மூலம் குருடான கண்களும், செவிடான காதுகளும் மூடப்பட்ட உள்ளங்களும் திறக்கப்படும். இப்னு ஸலம் கூறுவது போன்றே கஃப் அவர்களும் கூற தாம் கேட்டதாக அபூ வாகித் அல்லைதீ அவர்கள் என்னிடம் கூறினார்கள் என அவர்கள் கூறினார்கள்.
(இந்தச் செய்தி புகாரி, அஹ்மத் ஆகிய கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது.)
ஹதீஸ் எண்: 7
முஹம்மது விருப்பத்திற்குரிய எனது அடியாரான (இறைத்) தூதராவார். அவர் கடுகடுப்பானவரும் அல்லர், கடின சித்தமுடையவரும் அல்லர். கடைத் தெருக்களில் கூப்பாடு போடுபவரும் அல்லர். தீமைக்கு தீமையைச் சமமாக்குபவரும் அல்லர். மாறாக மன்னிக்கும் மனப்பான்மை கொண்டவர். இரக்கமுள்ளவர். அவருடைய பிறப்பிடம் மக்காவாகும். அவர் மாறிச் செல்லும் ஊர் பரிசுத்த (மதினா எனும்) ஊராகும். சிரியா வரையிலும் அவருடைய ஆட்சி இருக்கும் என்று (தவ்ராத்தின்) முதல் வரியில் இருந்தது. முஹம்மது, அல்லாஹ்வின் தூதர், அவரது சமுதாயத்தினர் புகழுக்குரியவர்களாவர். இன்பத்திலும் துன்பத்திலும் அல்லாஹ்வைப் புகழ்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றுவார்கள். சூரியனின் போக்கிற்கேற்ப ஒவ்வொரு நிலையிலும் (பாங்கின் மூலம்) அல்லாஹ்வைப் பெருமைப் படுத்துவார்கள். வானிலுள்ள கிரகங்களின் மேலிருப்பினும் நேரம் வந்தவுடன் தொழுவார்கள். தங்களின் மறைவுப் பகுதிகளை மறைத்திருப்பார்கள். (முகம், கைகள், கால்கள்) போன்ற உடலின் ஓரங்களை கழுவி, உளூச் செய்வார்கள். இரவில் அவர்களுடைய (திக்ரின்) சப்தங்கள் தேனீயின் சப்தத்தைப் போல் வான் வெளியில் ஒலிக்கும் என்றும் (தவ்ராத்தின்) இரண்டாவது வரியில் இருந்தது என கஃபு (ரலி) அறிவிக்கிறார்கள்.
ஹதீஸ் எண்: 8
ரசூல் (ஸல்) அவர்களின் பண்பைப் பற்றி தவ்ராத் வேதத்தில் நீ எதைக் கண்டீர் என்று கஃபுல் அஹ்பார் (ரலி) அவர்களிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது, மக்காவில் பிறப்பார், தாபத் (மதீனா) என்ற ஊருக்கு பயணம் (ஹிஜ்ரத்) மேற்கொள்வார். அவருடைய நிர்வாகம் சிரியா வரை இருக்கும். அவர் இழி செயலுடையவரல்லர். அவர் கடைத் தெருக்களில் நின்று கூச்சலிடுபவரல்லர். தீமைக்குத் தீமையை பரிகாரம் காண்பவரும் அல்லர். மாறாக தனக்கிழைக்கப்பட்ட தவறுகளை மன்னிப்பார். இரக்க குணமுடையவர் இன்பத்திலும் துன்பத்திலும் அல்லாஹ்வைப் புகழ்ந்திடும் புகழத்தக்க அவரது சமுதாயத்தினர் ஒவ்வொரு கஷ்டத்திலும் அல்லாஹ்வைப் பெருமைப் படுத்துவார்கள். உடலின் ஓரங்களைக் கழுவி உளூச் செய்வார்கள். மறைவுப் பகுதிகளை மறைப்பார்கள். அவர்கள் போருக்கு அணிவகுத்து நிற்பது போல் தொழுகைக்கும் அணிவகுத்து நிற்பார்கள். அவர்களுடைய பள்ளிவாசல்களிலேயே (இறைவனைத் துதிக்கும்) அவர்களின் சப்தம் தேனீயின் ரீங்காரத்தைப் போன்றிருக்கும். அவர்களுடைய சப்தம் வான் வெளியில் எதிரொலிக்கும் என்று (தவ்ராத்தில்) தாம் கண்டதாக கஃபு (ரலி) அவர்கள் கூறினார்கள்.
ஹதீஸ் எண்: 9
உங்களிடம் ஒரு தூதர் வந்துள்ளார். அவர் பலவீனமானவரோ, சோம்பேறியோ அல்லர். அவர் மூடிக்கிடக்கும் உள்ளங்களைத் திறப்பார். குருடான கண்களையும் பார்க்கச் செய்வார். செவிடான காதுகளைக் கேட்கச் செய்வார். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை எனக் கூறும் வரை வளைந்த நாவுகளை நேர்படுத்துவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜுபைர் இப்னு நுபைர் அல் ஹழ்ரமீ அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஹதீஸ் எண்: 10
ஆமீர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நபித்தோழர்களில் ஒருவருக்கு நபி (ஸல்) அவர்களிடம் ஒரு தேவையிருந்தது. அவர் நபி (ஸல்) அவர்களுடன் (இல்லம்) நுழையும் வரை சென்றார். அவர் கூறினார், 'நபி (ஸல்) அவர்கள் ஒரு காலை வெளியிலும் மறுகாலை வீட்டினுள்ளும் வைத்தவர்களாக பேசுபவர் போல் நின்றார்கள். பின்னர் என்னைப் பார்த்து, யாருடன் உரையாடிக் கொண்டிருந்தேன் என்பது உனக்குத் தெரியுமா? எனக் கேட்டு விட்டு '(நான் உரையாடியது) ஒரு மலக்குடனாகும், இதற்கு முன் அவரைக் கண்டதேயில்லை. அவர் எனக்கு ஸலாம் கூற தன் இரட்சகனிடம் அனுமதி பெற்று வந்திருக்கிறார். அவர் 'நாம் உம்மிடம் குர்ஆனை சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவிக்கக்கூடியதாகவும் (ஸகீனத் எனும்) அமைதியையும் பொறுமையையும் அருளி இருக்கிறோம் என்று (இறைவன் கூறுவதாக) கூறினார்.
நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்