இன்டெக்ஸ்

 குர்ஆன் விளக்கம் இன்டெக்ஸ்

Unicode Page

திருக்குர்ஆன் விளக்கம்
அறிமுகம்

    மனித சமுதாயம் நேர்வழி பெறுவதற்காக இறைவனால் அருளப்பட்ட இறுதி வேதம் அல்குர்ஆன், மிகவும் உயர்வான இலக்கியத் தரத்தில் அமைந்திருந்தாலும், 'இதுபோல் எவராலும் கொண்டுவர முடியாது' என்று சவால் விடும் அளவுக்கு உச்சத்தில் இருந்தாலும், சராசரி மனிதனும் புரிந்து கொள்ளும் அளவுக்கு எளிமையாகவும் அதன் வசனங்கள் அமைந்துள்ளன.

    மனிதர்களால் எழுதப்பட்ட நூல்கள் இலக்கியத் தரத்தில் எந்த அளவுக்கு உயர்ந்த நிலையில் அமைந்துள்ளதோ அந்த அளவுக்கு சாதாரண மனிதர்களுக்கு அன்னியமாகிப் போவதை உலகில் நாம் காண்கிறோம்.

    அல்குர்ஆன் மட்டுமே எவரும் எட்ட முடியாத இலக்கியத் தரத்தில் அமைந்திருந்தாலும் சாதாரண மனிதரும் புரிந்து கொள்ளும் அளவுக்கு எளிமையானதாகவும் அமைந்துள்ளது. இந்த அமைப்பு ஒன்றே 'அது இறைவேதம்' என்று நிரூபணம் செய்திட போதுமானதாகும்.

    'இந்தக் குர்ஆனை விளங்குவதற்கு நாம் எளிமைப் படுத்தியுள்ளோம்' (54:17, 22, 32, 40)

    என்று பல இடங்களில் இறைவன் கூறுகிறான். 19:97, 44:58 ஆகிய வசனங்களும் குர்ஆன் விளங்கிட எளிதானது என்பதை அறிவிக்கின்றன.

    அனைவரும் எளிதில் விளங்கிட ஏற்றவகையில் அல்குர்ஆன் அமைந்துள்ளதால் விரிவுரைகளோ விளக்கவுரைகளோ இல்லா விட்டாலும் அல்குர்ஆனை அனைவரும் விளங்கலாம். மனிதனுக்கு அது கூறக்கூடிய செய்தியை அனைவரும் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் கூட மேலதிகமான விளக்கத்திற்காக இரண்டு வழி முறைகளில் முயற்சி செய்வதை அல்குர்ஆன் அனுமதிக்கின்றது. அந்த வழிகளில் முயற்சிப்பதை வலியுறுத்தவும் செய்கின்றது.

    'மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்'. (அல்குர்ஆன் 16:44)

    'அவர்கள் எதில் முரண்பட்டுள்ளார்களோ அதை நீர் தெளிவுபடுத்துவதற்காகவே உம் மீது இவ்வேதத்தை நாம் அருளினோம்'. (அல்குர்ஆன் 16:64)

    குர்ஆன் விளங்கிட எளிதானதாக இருந்தாலும் பூரணமாக விளங்கிக் கொள்ள நபி (ஸல்) அவர்களின் விளக்கவுரைகளும் அவசியம் என்பதை இவ்வசனங்கள் அறிவிக்கின்றன. குர்ஆனை முழுமையாக விளங்கிட நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகளையும், அவர்களின் வாழ்க்கையையும் துணைக்கழைத்துக் கொள்ள வேண்டும்.

    'அவர்கள் இந்தக் குர்ஆனை சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்களில் பூட்டுக்கள் உள்ளனவா? (அல்குர்ஆன் 47:24)

    '(நபியே!) பாக்கியம் நிறைந்த இவ்வேதத்தை உமக்கு நாம் அருளினோம். அவர்கள் இதன் வசனங்களை ஆராய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்'. (அல்குர்ஆன் 38:29)

    'இந்த போதனையை அவர்கள் சிந்திக்க வேண்டாமா?' (அல்குர்ஆன் 23:68)

    'தங்கள் இறைவனின் திருவசனங்கள் மூலம் அவர்களுக்கு போதனை செய்யப்பட்டால் குருடர்களாகவும் செவிடர்களாகவும் அதில் விழமாட்டார்கள்'. (அல்குர்ஆன் 25:73)

    திருக்குர்ஆனைப் பூரணமாக விளங்க மற்றொரு வழி அதன் வசனங்களை சிந்திப்பதாகும். முன்பின் பார்த்து அது சொல்லவருவது என்ன என்பதை ஆராயாமல் அவசர முடிவுக்கு வராமல் சிந்தனையைச் செலுத்த வேண்டும் என்பதை இவ்வசனங்கள் கூறுகின்றன.

    திருத்தூதரின் விளக்கவுரையையும் அறிவுப்பூர்வமான சிந்தனையையும் அடிப்படையாகக் கொண்டு இந்த விளக்கவுரையை நாம் துவக்குகிறோம். இந்த விளக்கவுரையில் தவறுகளைக் கண்ணுறும் அன்பர்கள் கடமை உணர்வுடன் உடனுக்குடன் சுட்டிக் காட்டுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

    ஆரம்ப அத்தியாயத்திலிருந்து இந்த விளக்கவுரையை நாம் துவக்க வில்லை. மாறாக 30 வது ஜுஸ்வு என்று அறியப்பட்ட கடைசி ஜுஸ்விலிருந்து நாம் விளக்கவுரையைத் தொடர்கிறோம்.

    சின்னஞ்சிறு அத்தியாயங்களைக் கொண்டதாகவும், அதிகமான மக்களால் மனனம் செய்யப்பட்டதாகவும், தொழுகையில் அதிக அளவு ஓதப்படும் அத்தியாயங்களைக் கொண்டதாகவும் இந்த பாகம் அமைந்துள்ளதால் இந்த பாகத்தை விள்க்கவுரைக்காக தேர்வு செய்தோம்.

    ழுகையில் இந்த அத்தியாயங்களை ஓதும் போதே அவற்றின் பொருளையும் விளக்கத்தையும் மக்கள் விளங்கி ஓத வேண்டுமென்பதே இதன் நோக்கம். இனி விஷயத்துக்கு நேரடியாக வருவோம்.

நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்   

இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்