இன்டெக்ஸ்

 செய்திகள் இன்டெக்ஸ்

Unicode Page

தம்மாம் மாநகரில் ஒருநாள் இஸ்லாமிய மாநாடு

    அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் தம்மாம் மாநகரில் ஒருநாள் இஸ்லாமிய மாநாடு 11.07.2008 அன்று நடைபெற்றது.

    இந்த மாநாட்டை தம்மாம் மாநகரில் செயல்படும் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மையத்தின் தமிழ் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது.

    இந்த மாநாட்டில் இந்திய இலங்கை தமிழ் பேசும் சகோதரர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    தவ்ஹீது வளர்ச்சியின் ஆணிவேராக திகழும் தம்மாம் மாநகரத்து தமிழ்பேசும் மக்கள் மத்தியில் இஸ்லாமிய அறிவை பெருக்கும் தாகம் எதிர்பார்த்த ஒன்று தான்.

    இந்த மாநாட்டிற்கு சவூதி அரேபியாவின் மற்ற ஊர்களிலிருந்தும் தமிழ்பேசும் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். குறிப்பாக அல்கோபர், சிஹாத், கதீப், ரஹீமா, அல்ஹஸா, அப்கெய்க், ஜுபைல், ஹப்ஜீ போன்ற ஊர்களிலிருந்தும் வந்து கலந்து கொண்டார்கள்.

    ஏராளமான பெண்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர், அவர்களுக்காக தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிகழ்ச்சி கூஜா பார்க் அருகிலுள்ள மலிக் அப்துல் அஜீஸ் என்ற பிரம்பாண்டமான பள்ளி வாசலில் நடந்தது.

    11.07.2008 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிக்கு ஆரம்பித்து மாலை 6:30 வரை இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்காக பல இடங்களிலிருந்து வாகன ஏற்பாடுகளும், காலை, மதிய உணவு மற்றும் மாலை தேனீர் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

    முதல் அமர்வுக்கு  மௌலவி ரிஸ்வான் தலைவராக இருந்தார். அவரது தலைமையுரையில் இந்த நிகழ்ச்சியை நடத்தும் தம்மாம் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு மையத்தின் சேவைகளை எடுத்துரைத்தார்.

    சிறப்புப் பேச்சாளர் மௌலவி நூஹ் மஹ்லரி அவர்கள் காலத்தின் அவசியம் என்ற தலைப்பில் சரித்திர சிறப்பு மிக்க உரை நிகழ்த்தினார்.

    அதனைத் தொடர்ந்து மௌலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் அழைப்புப்பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

    தம்மாம் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு மையத்தின் தலைவர் அஷ்ஷேய்க் முபாரக் அவர்களின் மாநாட்டு சிறப்புரை வெண்திரையில் காட்டப்பட்டது.

    அதன் பிறகு ஜும்ஆ தொழுகைக்காக இடைவேளை விடப்பட்டது.

    ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு இரண்டாம் அமர்வு ஆரம்பமானது, இதற்கு மௌலவி நூஹ் மஹ்லரி தலைமை தாங்கினார்.

    மலிக் அப்துல் அஜீஸ் பள்ளியின் தலைமை இமாம் அஷ்ஷேக்.உதுமான் அஸ்ஸைஃப் அவர்கள் அரபு மொழியில் உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியினால் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக கூறினார்.

    அதனைத் தொடர்ந்து தம்மாம் தஃவா மற்றும் வழிகாட்டி மையத்தின் முன்னாள் தலைவர் அஷ்ஷேய்க்.அஹ்மது அல்அஹ்மது உரையாற்றினார். இவர் தமிழகத்தில் தவ்ஹீதின் வளர்ச்சியில் நல்ல ஆர்வமும் அனுபவமும் உள்ளவர். அவரது பேச்சின் ஆரம்பத்தில் நூஹ் மௌலவியிடம் மூன்று கேள்விகள் தமிழில் கேட்டதும், அதற்கு அவர் பதில் சொன்னதும் கலகலப்பான அனுபவமாகும். அவர் சொல்ல வந்த விஷயங்களை அரபியிலும் ஆங்கிலத்திலும் எடுத்துரைத்தார்.

    அரபு மொழியில் பேசப்பட்ட அனைத்து உரைகளையும் மௌலவி நூஹ் மஹ்லரி தமிழாக்கம் செய்தார்.

    அதனைத் தொடர்ந்து 'நாம் காணும் கியாமத் நாளின் அடையாளங்கள்' என்ற தலைப்பில் மௌலவி ரம்ஜான் ஃபாரிஸி உரை நிகழ்த்தினார். இவர் ரியாத் ரவ்லா ஜாலியாத் மையத்தில் பணியாற்றக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மதியம் 2:30 மணிக்கு மதிய உணவுக்காகவும் அஸர் தொழுகைக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியின் அனைத்து சேவைகளையும் தம்மாம் தமிழ் தஃவா கமிட்டி மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தது.

    அஸர் தொழுகைக்குப் பின் இளம் மௌலவிகள் முகம்மது அலி, ஸமீம் ஆகியோர் தனது குறும் பேச்சால் மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார்கள்.

    மௌலவி அலாவுதீன் பாக்கவி, அவர்களின் பாணியில் அறிவுப்பூர்வமான 10 கேள்விகள் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

    இறுதியாக ஜுபைல் தஃவா நிலையத்தில் பணி புரியும் மௌலவி முஹம்மது அஸ்கர் அவர்கள் குர்ஆன் சுன்னாவை பின்பற்றுவதன் அவசியத்தை பற்றி பேசினார்கள்.

    அங்கு பேசப்பட்ட பேச்சுக்களிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பரிசுகளும், குலுக்கல் முறையில் அங்கு வந்த சகோதர சகோதரிகளுக்கான பரிசுகளும், இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட வினாவிடை போட்டியில் வென்றவர்களுக்கான பரிசுகளும் நிகழ்ச்சியின் இறுதியில் வழங்கப்பட்டன.

    மௌலவி ரிஸ்வான் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

தம்மாமிலிருந்து அபூஅன்ஸாரி

நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்   

இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்