
| இஸ்லாம் ஓர் அறிமுகம் இன்டெக்ஸ் |
Unicode Page |
|
பாகம் - 6
அல்லாஹ் உங்களை இட்டு திருப்தியுற வேண்டும்
அந்த வழி இஸ்லாம் ஒன்று மட்டுமே. நாம் இவ்வுலகிலும் மறு உலகிலும் வெற்றியும் விமோசனமும் பெறுவதற்கு இஸ்லாத்தைத் தவிர வேறு வழியே இல்லை. அதன்படி வாழ்வதே நன்று. எனவே, என் அம்மா! நீங்கள் இம்மதத்தை ஏற்று வாழ்வதைக் காண நான் துடியாய் துடிக்கிறேன், அவாவுறுகிறேன்.
நான் வீட்டிலிருந்த வேளையில் பல முறை இது பற்றி உங்களுக்கு விளக்கிக் கூற முயன்றேன். 'இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்களேன்' என்று கூட வேண்டினேன். என்றாலும் நீங்கள் எத்தகைய கவனமும் எடுக்கவில்லை.
உண்மையில், இது தொடர்பாக நான் உங்களிடம் எதுவுமே எதிர்பார்க்க வில்லை. மேலும், எனக்கு உலக வாழ்வு தொடர்பான ஏதேனும் எதிர்பார்ப்போ, ஆசையோ, ஆர்வமோ இல்லை என்பது நீங்களும் அறிந்த விஷயம்.
என் உள்ளத்தைக் குடைந்து கொண்டிருக்கும் ஆர்வம், ஆசை, வேதனை எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக உங்கள் முன் சமர்ப்பிக்கட்டுமா அம்மா?
இதோ கேளுங்கள்:
பத்து மாதங்கள் சுமந்திருந்து என்னைப் பெற்ற என் அன்னை என் உயிரை விடவும் அன்பிற்குரியவர். அவர் என் கண் எதிரிலேயே கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பில் வீழ்ந்து வேதனைப் படுவதைக்காண, நான் ஒரு போதும் சகிக்க மாட்டேன். அந்த பயங்கர வேதனையிலிருந்து என் அன்பே உருவான அன்னையை மீட்டெடுப்பது தான் என் ஒரே எண்ணம்!
அம்மா! நீங்கள் இப்பொழுது பின்பற்றும் மதம் உங்களை நரகத்திற்குத்தான் இழுத்துச் செல்லும். அதை இன்னும் நீங்கள் விளங்கிக் கொள்ளாது இருப்பது துரதிஷ்டமே!
இதை இன்னும் தெளிவாக நீங்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் ஓர் உதாரணத்தின் மூலம் கூறட்டுமா அம்மா.
நீங்கள் ஒரு ரயிலில் பயணம் செய்வதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த ரயில் போகும் பாதையில், சற்று தூரத்தில் பாதை தடம் புரண்டிருப்பதை நான் தெளிவாக அறிவேன். அதில் பயணம் செய்யும் ஏராளமான பிரயாணிகள் இதை அறியாது உள்ளனர். ஆனால், அவர்கள் அனைவரும் தாம் போக வேண்டிய இடத்திற்குப் போக முடியாமற் போவதும், இடையில் பாரிய விபத்தொன்று நடக்கப் போவதும், அவர்களுள் பலர் பயங்கரமான முறையில் மரணத்தைச் சந்திக்கப் போகின்றனர் என்பதும் நான் நன்கு அறிந்த விவரங்கள்.
இதேவேளை என்னிடம் ஒரு மோட்டார் வண்டி உண்டு. அதில் பாதுகாப்பாகப் போக வேண்டிய இடத்திற்குப் போக முடியும். எனவே, அந்த ரயிலை நிறுத்தும் ஒவ்வொரு இடத்திலும் நான் பதற்றத்துடன் உங்களிடம் ஓடோடி வந்து, 'அம்மா! இதில் பயணம் செய்வது ஆபத்து, உடனே இறங்கி வந்து என் மோட்டார் வண்டியில் ஏறி அமருங்கள். பாதுகாப்பாக எம் பயணத்தை மேற்கொள்ளலாம்' என்று அன்போடு அழைக்கின்றேன். மரணத்தைக் கொண்டு வரும் ரயிலிலிருந்து இறங்கி என் வண்டியில் ஏறும்படி நான் உங்களிடம் மன்றாடிக் கேட்கின்றேன். எனினும் நீங்கள் என் அழைப்பை ஏற்கிறீர்கள் இல்லையே! என்றாலும் அந்த பயணத்தின் கோர விளைவை உணர்ந்த நான், உங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருப்பேன்.
அம்மா! அந்த அழிவின் விளிம்பிற்குப் போகுமுன் ரயிலிலிருந்து இறங்கி, என் மோட்டார் வண்டியில் ஏறிக் கொண்டால் நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு சுகமாக போய் சேர முடியும். இல்லையாயின், நீங்களும் மற்ற பிரயாணிகளுடன் சேர்ந்து கோர அழிவைத்தான் சந்திக்க போகிறீர்கள். அந்தக் கடைசி கட்டத்தில் நீங்கள், 'அந்தோ! என் மகன் விடுத்த அழைப்பை ஏற்றிருந்தால்.. அவனது மோட்டார் வண்டியில் ஏறியிருந்தால்..' என கைசேதப்பட்டு, அழுது புரண்டு பிரலாபிப்பீர்கள். அது காலம் கடந்து விட்ட பரிதாப நிலை அல்லவா!
நீங்கள், நான் பயணத்தை மேற்கொண்டுள்ள இஸ்லாம் எனும் வாகனத்தில் வந்தமர்ந்து பயணத்தை ஆரம்பித்தால், நீங்கள் எதிர்பார்க்கும் இடத்திற்கு எத்தகைய இடையூறும் இன்றி பத்திரமாகப் போய்ச் சேர முடியும் என்பதில் ஐயமே இல்லை.
என்னுயிர்த் தாயே!
இவை என் உள்ளத்தில் உதித்த சில கருத்துக்கள், உங்கள் முன் சமர்ப்பித்துள்ளேன். இவற்றை நன்றாக சிந்தியுங்கள். அல்லாஹ் உங்களை மிகச் சரியான பாதையில் பயணத்தை மேற்கொள்ளச் செய்வானாக!
'நீங்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்ற பின் அல்லாஹ் உங்களை இட்டு திருப்தியுற வேண்டும். அவனுடைய சுவன செல்வங்களுக்கு நீங்கள் உரித்துடையவராக வேண்டும்' என நான் இருகரம் ஏந்தி வல்லோனிடம் பிரார்த்தனை புரிகின்றேன்.
நான் எழுதியவை பற்றி நன்கு சிந்தித்து பதில் எழுதுவீர்கள் என திடமாக நம்புகின்றேன். அதோடு, என் குற்றங் குறைகளை மன்னிப்பீர்கள் எனவும் எதிர்பார்க்கின்றேன்.
இவ்வண்ணம்,
பணிவன்புள்ள மகன்,
நஸீம் காஜி
(முன்னாள் ஹேம்குமார் அகர்வால்)
நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்