இன்டெக்ஸ்

 இஸ்லாம் ஓர் அறிமுகம் இன்டெக்ஸ்

Unicode Page

    பாகம் - 5

நிரந்தரமான மறுவுலக வாழ்வில் நீங்கள் விமோசனம் பெற வேண்டும்

அன்புத் தாயே!

எம்மைப் படைத்த அல்லாஹ்வும், அவன் தூதரும் எமக்கு எவற்றைச் செய்யும் படி கட்டளை இட்டுள்ளார்களோ, அவற்றை மனப்பூர்வமாக ஏற்றுச் செய்வதற்கு, நான் திடமனம் கொண்டுள்ளதாக முன்னரே கூறிவிட்டேன். பெற்றோரைப் பற்றிய இறையாணைகள் எவையோ அவற்றின்படி அவர்களிடம் நடந்து கொள்வேன். அந்த இறையாணைகள் என்னென்ன என்பதை நான் உங்களுக்கு நன்கு விளக்கிக் கூறியுள்ளேன். அவற்றிற்கமைய என் வாழ்நாள் முழுவதும் அமையும் என உறுதியாகக் கூற விழைகின்றேன்.

இவற்றைப் படித்து விட்டு நன்கு சிந்தியுங்கள் அம்மா. அப்பொழுது, 'என் மகன் சொல்வதெல்லாம் உண்மைதான்!' என்று உங்கள் உள்ளுணர்வுகள் உணர்த்துமாயின், எத்தகைய ஐயமுமின்றி கீழ்காணும் முடிவுக்கு நீங்கள் வருவீர்கள்.

'என் மகனை மௌலானா தவறான வழியில் இட்டுச் சென்றார் என நான் நினைத்தது தவறு, அவன் எனது மகனல்ல எனக் கூறியதும் தவறு. மாறாக, மௌலானா என் மகனை சரியான மகனாக ஆக்கினார். அவர் என் மகனை தவறான வழியில் இட்டுச் செல்லவில்லை. மாறாக, வாழ்வுக்கான நேரிய வழியைக் காட்டினார். 'இவன் உங்களது ஒரு மகனாக இருக்க மாட்டான்' என அன்று சோதிடர் கூறியது பொய், தவறு'.

ஆமாம் தாயே! நான் கூறியது உண்மை என நீங்கள் விளங்கிக் கொண்டால் மேற்காணும் முடிவுகளுக்கே வருவீர்கள் - இது உறுதி.

கருணையே உருவான அம்மா!

நீங்கள் உறுதியாக நம்புங்கள். நான் என்றென்றும் உங்கள் மகனாகவே இருப்பேன். எப்பொழுதும் நான் உங்களுக்குச் சொந்தமாவேன். எனவே, உங்கள் உள்ளத்தில் வேர்பிடித்து வாட்டும் வேதனைகளையும் அச்சத்தையும் வேரோடு பிடுங்கி எறிந்து விடுங்கள்.

மனித சமுதாயத்திற்கு நேரான வழியைக் காட்டும் உண்மையான மார்க்கம் இஸ்லாம் ஒன்று மட்டுமே. இது அனைத்தும் அறிந்த அல்லாஹ்வால் அருளப் பெற்றது. மனித வாழ்வுக்கு அவசியமான, அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டக்கூடிய அம்சங்கள், நீதி நெறிமுறைகள் இதில் அடங்கியுள்ளன. ஒரு வேதம் சத்தியமானதா அல்லது அசத்தியமானதா என்பதை அறிந்து கொள்ள, அந்த வேதத்தின் ஒரு அம்சத்தை மட்டும் ஆய்வுக்குட்படுத்துவது போதுமானது.

இங்கு பெற்றோர் பற்றிய இஸ்லாத்தின் போதனைகள் என்ன என்பதை சுருக்கமாக உங்கள் முன் சமர்ப்பித்துள்ளேன். இவற்றை திறந்த மனதுடன் படிக்கும் நீங்கள், இஸ்லாம் எவ்வளவு சிறப்பான மதமென்று, வாழ்க்கை முறையென்று விளங்கிக் கொள்வீர்கள். இது போன்ற பூரணத்துவமும் தெளிவானதுமான மற்றொரு மதம் உண்டா என்றால், 'நிச்சயமாக இத்தகைய விளக்கம் நிறைந்த, நீதி வழி சார்ந்த மற்றொரு மதம் இல்லை!' என்பது உங்கள் முடிவாக இருக்கும் என்பது என் திடமான நம்பிக்கை.

இது போலவே வாழ்வின் ஒவ்வொரு துறைக்குமான நீதிநெறி முறைகள் இஸ்லாத்தில் இருக்கின்றன. அவை மனித சமுதாயத்திற்கு எப்பொழுதும் நேர்வழியைக் காட்டி நிற்கும்.

என் அன்புத் தாயே!

நீங்கள் என்னை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தீர்கள். அவை ஒன்றிரண்டா? உங்கள் கருவறையில் என்னை சில மாதங்கள் சுமந்திருந்தீர்கள். எனக்காக நீண்ட கால வேதனைகளை சகித்துக் கொண்டீர்கள். நான் இவ்வுலக ஒளியைக் காணும் போது வெறுமனே ஒரு சதைக்கட்டி தான். அப்போது நான் சக்தியேயில்லாது பலவீனமாக இருந்தேன். எனினும், நீங்கள் இந்த சதைக் கட்டியை, உங்கள் உடல் வலுவைத் தியாகம் செய்து, இரத்தத்தை அமுதாக்கித் ஊட்டி, தாலாட்டி, உவகையோடு, அவசியமான அத்தனையையும் தந்து கவனித்தீர்கள். நான் ஓரளவு வளர்ந்து வந்த போது என் கல்விக்கான ஆக்கப் பணிகளைச் செய்தீர்கள். நான் அறிவு பெற வேண்டும். நல்லதொரு மனிதனாக வாழ வேண்டும் என்ற மட்டில்லா ஆசையோடு என்னவெல்லாமோ செய்தீர்கள்.

நான் நோயுற்ற போது நீங்கள் பொறுமை இழந்து காணப்பட்டீர்கள். என் கண்களில் நீர் வடிந்தால், உங்கள் இதயத்தில் இரத்தம் பீரிட்டு வருவதைப் போன்ற உணர்வைப் பெற்றீர்கள். ஊன், உறக்கம் இல்லாது காலத்தையும் சிரமத்தையும் எனக்காக அர்ப்பணித்தீர்கள். இவ்வாறு அன்போடு அரவணைத்து என்னை ஊட்டி வளர்த்த அன்னை நீங்கள். உங்கள் உணவை எனக்குத் தந்து நான் உண்பதைப் பசியுடன் பார்த்திருந்து பரவசம் அடைந்த அம்மா நீங்கள். எனக்கு அழகும் கவர்ச்சியும் நிறைந்த உடைகளை அணிவித்து அழகு பார்த்த நீங்களோ அலுக்கான பழைய உடைகளை அணிந்தீர்கள்.

உண்மையில், நீங்கள் எனக்காக தியாகம் செய்த உங்கள் பொன்னான காலமும் சிரமமும் அற்ப சொற்பமானவை அல்ல. அவற்றை என் நாவினால் மொழிந்து முடித்துவிட முடியாது. இவற்றுக்காக நான் எப்படித்தான் கைமாறு செய்வேனோ? நான் என்னதான் உங்களுக்குப் பணிவிடைகள் புரிந்தாலும், விழுந்து விழுந்து கவனித்தாலும் உங்கள் தன்னலமற்ற தியாகங்களுக்கு எதிரில் அவை மிக அற்பமானவையே!

பெற்ற தாயைக் கவனிக்கும் படியும், அவருக்கு உதவி ஒத்தாசை புரியும் படியும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். நீங்கள் எனக்கு இவ்வுலகில் நல்வாழ்வு பெற்றுத் தந்தீர்கள். உங்களுக்கு பணிவிடை புரிவதும் உதவி ஒத்தாசை புரிவதும் என் நீங்காக் கடமை. அந்த வகையில் என் மிக உயர்ந்த விருப்பம் என்னவெனில், என்றும் நிரந்தரமான மறுவுலக வாழ்வில் நீங்கள் விமோசனம் பெற வேண்டும் என்பது தான். எந்த வழியில் சென்றால் அந்த விமோசனம் கிடைக்குமோ அந்த வழியை உங்களுக்குக் காட்டித் தருவது என் கடமை.

நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்   

இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்