இன்டெக்ஸ்

 இஸ்லாம் ஓர் அறிமுகம் இன்டெக்ஸ்

Unicode Page

    பாகம் - 3

உங்கள் தந்தையின் பெயர் சொல்லி அழைக்காதீர்கள்

அன்புத் தாயே!

அல்லாஹ் என்ன கூறுகின்றான் என்பதைக் கவனித்தீர்களா? தாயையோ தந்தையையோ அடித்துத் துன்புறுத்துவது, மிகவும் வெறுக்கத்தக்க முறையில் பேசுவது என்பன, எப்படிப் போனாலும், அவர்களுடைய மனதுக்கு வருத்தத்தைத் தரும் மிகச் சிறிய சொல்லொன்றைக்கூட பேச வேண்டாம் என்பது இறைவன் இடும் கட்டளையாகும்.

'சில வேளை உங்களுக்குத் திருப்தியைத் தராத ஏதேனும் சொற்கள் உங்கள் பெற்றோரின் நாவிலிருந்து வெளிப்பட்டால் கூட நீங்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறின்றி அவர்களைக் கோபமுறச் செய்யாதீர்கள். எப்பொழுதும் அவர்கள் திருப்தியுடன் இருக்க வழி செய்யுங்கள்' என்பன போன்ற கட்டளைகளும் இறைவனிடத்திலிருந்து வந்துள்ளன.

நபி (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்:

'அல்லாஹ்வின் திருப்தி தந்தையின் திருப்தியில் தங்கி இருக்கிறது, அதுபோல, அல்லாஹ்வின் கோபம் தந்தையின் வெறுப்பில் தங்கியிருக்கின்றது'.

அன்பே உருவான தந்தைக்குக் கீழ்படிந்து, அவரது சொற்படி நடந்து, அவருக்குத் திருப்தியை அளித்தால் அல்லாஹ்வும் திருப்தியுறுவான். தந்தைக்குக் கீழ்படியாது, அவரது அன்புக் கட்டளைகளைப் புறக்கணித்து, தான் தோன்றித்தனமாக நடந்து கொண்டால் அவருக்குக் கோபமும் வேறுப்பும் ஏற்படும். அது அல்லாஹ்வின் வெறுப்பைத் தேடித் தரலாம்.

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

'யாரேனும் ஒருவர் தனது பெற்றோருக்குப் பணிவிடை புரிந்தால் அவருக்கு ஈருலக நன்மைகள் கிடைக்கும், பெற்றோருக்கு உதவுவதால் அவரது ஆயுள் நீடிக்கும், உணவில் அபிவிருத்தி ஏற்படும்'.

இதிலிருந்து பெற்றோருக்குப் பணிவிடைப் புரிந்து வருவது எத்தகைய பாரிய பொறுப்பு என்பதை நாம் உணரலாம். அவர்களை மிகுந்த இரக்கத்துடன் பார்ப்பதும், உதவி ஒத்தாசை புரிந்து இன்புறச் செய்வதும் பிள்ளைகளின் கடமையாகும்.

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு மொழிந்தார்கள்:

'பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்கள் ஏதேனும் பணியொன்றினை ஆரம்பிக்கும் பொழுது, அது எத்தகையதாயினும் பெற்றோரின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளுங்கள், நீங்கள் அவர்களுடன் இணக்கமாக இருப்பீர்களாயின், அது உங்களுக்கான சுவனவாசலைத் திறந்து கொள்வதற்கான ஓர் அம்சமாக இருக்கும்'.

மற்றொரு முறை நபி (ஸல்) அவர்கள் மொழிந்ததாவது:

'ஒருவர் மனப்பூர்வமாக பெற்றோருக்கு பணிந்து நடந்தால், அவருக்காக சுவனவாசல் திறந்திருக்கும், பெற்றோரின் சொல்லுக்கு மரியாதை தராது பணிவின்றி நடப்போர் நரகுக்குச் செல்லத் தயாராக வேண்டும்'.

'பெற்றோருடன் மிக நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். அவர்களை அவமரியாதையாகவோ நிந்தனையாகவோ பேசாதீர்கள். அவர்கள் எதிரில் மிகுந்த பணிவன்புடன் கண்ணியமாக காரியமாற்றுங்கள். அவர்கள் மத்தியில் நீங்கள் பெரிய மனிதராகப் பார்க்காதீர்கள்' என்பன இறைமறை வடித்துத் தரும் இனிய கருத்துக்கள்.

நபி (ஸல்) அவர்களின் நண்பர்களுள் ஒருவரான கீர்த்திமிக்க ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் தமது நண்பர்களை விளித்துக் கூறினார்கள்:

'உங்கள் தாயுடன் மிகப் பணிவுடன் பேசுவதும், அவருடைய உணவுத் தேவையைக் கவனிப்பதும், உங்களுக்குச் சுவனத்தை சொந்தமாக்கி விடும். ஆனால், ஒரு நிபந்தனை – நீங்கள் பாவச் செயல்களில் ஈடுபடாது இருக்க வேண்டும்'.

நபி (ஸல்) அவர்களின் மற்றுமொரு முக்கிய நண்பரான ஹஸ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

'நீங்கள் உங்கள் தந்தையின் பெயர் சொல்லி அழைக்காதீர்கள், அவருக்கு முன் நடக்காதீர்கள், அவர் அமருமுன் அமராதீர்கள்'.

நபி (ஸல்) அவர்கள் பெற்றோர் மீது கருணை காட்டுவதன் அவசியம் பற்றி வெகுவாக எடுத்துரைத்துள்ளார்கள். அதே போல மற்றும் பலரும் பல்வேறு கட்டங்களில் பெற்றோருக்குக் கண்ணியம் அளித்தல், கருணை காட்டல், அவர்கள் மீது இரக்கம் கொள்ளுதல் பற்றி கூறிய கருத்துக்கள் ஏராளமுண்டு.

'நல்ல பிள்ளைகள் தம் பெற்றோரை நிறைந்த அன்புடன் நோக்குவதும் கூட பரிபூரணமான ஹஜ் ஒன்றை செய்த நன்மையை அல்லாஹ்விடம் இருந்து பெற்றுத்தர வல்லதாக உள்ளது. ஒருவரின் சொத்து சுகம் என்பவற்றின் மூல சொந்தக்காரர்கள் அவரின் பெற்றோர் ஆவார்கள்' என்பன இஸ்லாம் முன்வைக்கும் இதமான கருத்துக்களாகும்.

மனிதன் தனது சொத்து செல்வங்களைப் பல வழிகளில் செலவு செய்கிறான். அந்த செல்வங்கள் அனைத்திற்கும் மூலச் சொந்தக்காரர்கள் பெற்றோரே. எனவே, அவற்றின் மூலம் முதலில் பெற்றோரின் தேவைகளே கவனிக்கப்பட வேண்டும். அதற்கு அடுத்துத்தான் மற்றவைகள் தொடர்பான செலவுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவர் தனது பெற்றோருக்காக திறந்த மனதுடன் ஆர்வத்துடனும் செலவழித்தல் அவசியம், அதில் கஞ்சத்தனம் வரவே கூடாது.

நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்   

இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்