| இப்னுமாஜா நபிமொழித் தொகுப்பு | Unicode Page | Font Help |
இப்னுமாஜா 4
4 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ ثَنَا زَكَرِيَّا بْنُ عَدِيٍّ عَنِ بْنِ الْمُبَارَكِ عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ عَنْ أَبِي جَعْفَرٍ قَالَ كَانَ بْنُ عُمَرَ إِذَا سَمِعَ مِنْ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم حَدِيْثًا لَمْ يَعْدُهُ وَلَمْ يُقَصِّرْ دُوْنَهُ
'நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு உமர் (ரலி) எதையாவது செவியுற்றால் அதைவிட அதிகப்படுத்தாதவர்களாகவும் அதைவிட குறைக்காதவர்களாகவும் திகழ்ந்தார்கள்' என்று அபூஜஃபர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
ஹதீஸ் விளக்கம்:
எதையும் கூட்டாமலும் குறைக்காமலும் ஹதீஸ்களை அறிவிக்க வேண்டும் என்பது எல்லா நபித்தோழர்களுக்கும் உரிய பண்பு என்றாலும் இப்னு உமர் (ரலி) அவர்கள் இதில் அதிகமதிகம் சிரத்தை எடுத்துக் கொண்டார் என்பதை இந்த செய்தி சொல்கிறது.
இப்னு உமர் அவர்களுக்கென்று சில
தனிச்சிறப்புகள் உள்ளன. அவர், நபி (ஸல்) அவர்களின் திருவாயால் நற்சான்றிதழும்
கிடைக்கப் பெற்றார். அதாவது,
'அப்துல்லாஹ் (இப்னு உமர்) ஒரு நல்ல மனிதர்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்கள்: புஹாரி 3740,3741, முஸ்லிம் 6056)
இன்னும், இப்னு உமர் (ரலி) அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் ஹதீஸ்களை அறிவிப்பதில்
அதிக கவனம் எடுத்துக் கொண்டுள்ளார். அவருக்கு திருப்தி ஏற்படாத வரை எந்த ஹதீஸையும்
அறிவிக்க மாட்டார். ஹதீஸ் அறிவிக்கும் போது ஏதேனும் விபரங்கள் விடுபடாதவாறும்
பார்த்துக் கொள்வார்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது
மக்களில் ஒருவர், 'அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி
புக்ரத்தவ் வ அஸீலா' (அல்லாஹ் மிக்பபெரியவன் என்று பெறுமைப்படுத்துகிறேன்.
எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப்போற்றுகிறேன். அல்லாஹ்
பரிசுத்தமானவன் என்று காலையிலும், மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்) என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்ன இன்ன வார்த்தைகளை மொழிந்தவர் யார்? என்று
கேட்டார்கள். அப்போது மக்களில் ஒருவர், நான்தான் அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் இதைக்கேட்டு வியப்புற்றேன். இதற்காக
வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டன என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக்கேட்டதிலிருந்து நான் அதைக்கூறாமல்
இருந்ததில்லை. (நூல்: முஸ்லிம் 1052)
இப்னு உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களை எந்த அளவுக்கு பின்பற்றினார்கள் என்பதை இந்த ஹதீஸ் எடுத்துக் காட்டுகிறது. இது மட்டுமின்றி நபி (ஸல்) அவர்களின் ஆதத் எனும் வணக்கவழிபாடாக இல்லாத செயல்களைக்கூட இப்னு உமர் விட்டுவிட மாட்டார்கள். உதாரணமாக, பயணத்தின் போது நபி (ஸல்) அவர்கள் ஓய்வுக்காக ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து விட்டு செல்வார்கள், அதே மரத்தின் அடியில் இப்னு உமர் (ரலி) அவர்களும் அமர்ந்து விட்டு, 'நபி (ஸல்) அவர்கள் இங்கே அமர்ந்து விட்டு சென்றார்கள், அதனால் நானும் அமர்ந்து விட்டுச் செல்கிறேன்' என்றார்கள்.
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
இந்தப் பக்கத்தை நண்பர்களுக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்
இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்