இன்டெக்ஸ்

 இப்னுமாஜா இன்டெக்ஸ்

Unicode Page

    பக்கம் - 3 (ஹதீஸ்கள் 21 முதல் 30 வரை)

அத்தியாயம்: முகத்திமா - முகப்பு

ஹதீஸ் எண்: 21

என் வழியாக ஏதேனும் ஒரு செய்தி உங்களில் எவருக்கேனும் அறிவிக்கப்படும் போது, 'அவர் தமது ஆசனத்தில் சாய்ந்து கொண்டு (அதாவது அலட்சியமாக) குர்ஆனை ஓதிக் காட்டு! என்று கூறலாகாது. (அதாவது குர்ஆனில் கூறப்பட்டதை மட்டுமே ஏற்போம்! ஹதீஸ்களை ஏற்கமாட்டோம் என்று கூறலாகாது) அழகான கருத்துக்கள் (எவர் மூலமாவது) சொல்லப்படுமானால் அதை நானும் சொல்லியிருக்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸில் மக்புரி என்பார் தனது பாட்டனார் வழியாக அறிவிப்பதாக உள்ளது. அவர் யாரெனத் தெரியவில்லை)

ஹதீஸ் எண்: 22

என் சகோதரர் மகனே! அல்லாஹ்வின் தூதர் வாயிலாக உனக்கு நான் எதையாவது கூறும் போது அதற்கு (எதிராக) உதாரணங்களை நீ கூறிக் கொண்டிராதே! என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஒரு மனிதரிடம் கூறினார்கள் என்று அபூஸலமா அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: ஹாகிமிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது)

பாடம்: 3 நபி (ஸல்) அவர்களைப் பற்றி அறிவிப்பதில் எச்சரிக்கையாக இருத்தல்

ஹதீஸ் எண்: 23

இப்னு மஸ்வூது (ரலி) அவர்களிடம் வியாழன் மாலைதோறும் நான் வருவதற்கு தவறியதே இல்லை. அவர்கள் எந்த ஒரு செய்தியையும் 'ரஸுல் (ஸல்) சொன்னார்கள்' என்று கூறி நான் கேட்டதில்லை. ஒரு (வியாழன்) மாலையில் ரஸுல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று (ஒரு செய்தியைக்) கூறினார்கள். (கூறியதும்) தலை கவிழ்ந்தார்கள், அவர்களை ஏறிட்டு நான் நோக்கிய போது சட்டைப் பித்தான்கள் அவிழ்ந்து, கண்களிரண்டும் கண்ணீரைச் சொரிய பிடரி நரம்புகள் புடைக்க நின்று கொண்டிருந்தார்கள். 'நபி (ஸல்) அவர்கள் நான் கூறியதை விட குறைவாகவோ, அல்லது அதைவிட சற்று அதிகமாகவோ, அல்லது நான் கூறியதற்கு நிகராகவோ அல்லது நான் கூறியது போலவோ கூறினார்கள்' என்று இப்னுமஸ்வூது (ரலி) குறிப்பிட்டார்கள். (அதாவது நபி (ஸல்) அவர்கள் என்ன வார்த்தையைக் கூறினார்கள் என்பது திட்டவட்டமாக நினைவில்லாததால், அதில் மிகவும் பேணுதலுடன் இந்த வாசகத்தையும் சேர்த்துக் கொள்கிறார்கள்) என்று அம்ரு இப்னு மைமூன் அறிவிக்கிறார்.

(குறிப்பு: ஹாகிமிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

ஹதீஸ் எண்: 24

அனஸ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் வாயிலாக எதையாவது அறிவிக்கும் போது உள்ளம் நடுங்குவார்கள். மேலும் '(இதே வார்த்தையையோ) அல்லது இது போன்ற வேறு வார்த்தைகளையோ நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்' என்றும் குறிப்பிடுவார்கள் என முஹம்மது இப்னு ஸீரீன் அறிவிக்கிறார்.

ஹதீஸ் எண்: 25

நாங்கள் ஸைது இப்னு அர்கம் (ரலி) என்ற நபித்தோழரிடம், 'நபி (ஸல்) வாயிலாக (வந்த ஹதீஸ்களை) எங்களுக்கு அறிவியுங்கள்!' என்று கேட்டோம். அதற்கு அவர்கள் நாங்கள் முதுமை அடைந்து விட்டோம், (அதனால்) மறந்து விட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சம்மந்தப்பட்டவைகளை அறிவிப்பது மிகவும் கடுமையான ஒன்றாகும். (அறைகுறை நினைவில் ஹதீஸ்களை கூறலாகாது) என்று கூறினார்கள் என அப்துர்ரஹ்மான் இப்னு அபீலைலா அறிவிக்கிறார்.

ஹதீஸ் எண்: 26

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஓராண்டு காலம் உடனிருந்திருக்கிறேன். (அந்த ஓராண்டு காலத்தில்) அல்லாஹ்வின் தூதர் வழியாக எந்த ஒன்றையும் அவர்கள் கூறி நான் செவியுற்றதில்லை என்று இமாம் ஷுஃபீ அவர்கள் குறிப்பிடுட்டார்கள்.

ஹதீஸ் எண்: 27

நாங்கள் (ஒரு காலத்தில்) ஹதீஸ்களை மனனம் செய்பவர்களாக இருந்தோம். அல்லாஹ்வின் தூதர் பற்றிய செய்திகள் (அக்காலத்தில்) மனனம் செய்யப்பட்டன. ஆனால் முரட்டு வாகனங்களிலும், அடங்கி நடக்கும் வாகனங்களிலும் நீங்கள் பயணம் செய்ய துவங்கி விட்ட போது (ஹதீஸ்களின் தூய்மை) வெகு தொலைவுக்குச் சென்று விட்டது என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

(எந்த வாகனம் பயணத்திற்கு ஏற்றது என்று பரிசீலிக்காது கண்ட வாகனங்களிலும் பயணம் செய்வது போல ஹதீஸ்களை ஆராயாது கேட்டவற்றை எல்லாம் கூறத் துவங்கி விட்டதையே இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்)

(குறிப்பு: ஹாகிமிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

ஹதீஸ் எண்: 28

உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் எங்களை 'கூபாவுக்கு அனுப்பினார்கள். (அதற்கேற்ற வகையில்) எங்களைத் தயார் படுத்தினார்கள். ஸிரார் என்று சொல்லப்படும் இடம்வரை எங்களுடன் அவர்களும் நடந்து வந்தார்கள். 'ஏன் உங்களுடன் நான் நடந்து வருகிறேன்' என்பதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள். அன்ஸார்(களாகிய எங்)களின் தகுதிக்காகவும், அல்லாஹ்வுடைய தூதரின் தோழமை (எங்களுக்கு இருக்கிறது) என்ற தகுதிக்காகவுமே (எங்களுடன் நடந்து வருகிறீர்கள்) என்று நாங்கள் கூறினோம். (அவ்வாறில்லை! முக்கியமான) ஒரு செய்தியை உங்களுக்குக் கூற விரும்பியே நான் உங்களுடன் நடந்து வருகிறேன். (அதை சொல்வதற்காக) நான் உங்களுடன் நடந்து வந்ததால் (அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து) அதைப் பேணி நடப்பீர்கள் என்றும் நான் விரும்பினேன் என்று கூறிவிட்டு, நீங்கள் ஒரு சமுதாயத்தினரிடம் செல்கிறீர்கள்.

தண்ணீர் பாத்திரம் கொதிக்கும் போது எவ்வாறு நிலையற்றிருக்குமோ அது போல குர்ஆன் அவர்களிடம் ஆழமாக பதியாததால் அது பற்றி நிலையற்ற தன்மை அவர்களிடம் உண்டு. (நேரடி மொழிபெயர்ப்பு அல்ல, கருத்து மட்டும் தரப்பட்டுள்ளது
.)

உங்களை அவர்கள் காணும் போது உங்களை நோக்கி (ஆர்வமுடன்) தங்கள் கழுத்தை நீட்டுவார்கள். 'நபித்தோழர்கள்' என்று (பெருமிதத்துடன் உங்களைப் பற்றி) கூறுவார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் வழியாக அறிவிப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள்! பின்னர் நானும் உங்களுடன் (இது விஷயத்தில்) கூட்டாகிக் கொள்கிறேன் என்று உமர் (ரலி) கூறியதாக கர்ளா இப்னு கஃபு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் ஹாகிமிலும் இடம் பெற்றுள்ளது)

(குறிப்பு: குர்ஆன் ஆழமாகப் பதிந்துவிடாத அந்த சமுதாயத்தில் ஹதீஸ்கள் அதிக அளவில் கூறப்பட்டால் அது குர்ஆனுடன் கலந்து விடுமோ என்று அஞ்சியே உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஹதீஸ் எண்: 29

நான் ஸஃது இப்னுமாலிக் (ரலி) அவர்களுடன் மக்காவிலிருந்து மதீனா வரை பயணத் தோழனாக இருந்தேன். (அப்பயணத்தின் போது), நபி (ஸல்) அவர்கள் வழியாக ஒரு ஹதீஸைக் கூட அவர்கள் கூற நான் கேட்கவில்லை என ஸாயிப் இப்னு யஸீத் கூறினார்கள்.

பாடம்: 4 நபி (ஸல்) பெயரால் திட்டமிட்டுப் பொய் கூறுவது கண்டிக்கத் தக்கது

ஹதீஸ் எண்: 30

திட்டமிட்டு என் பெயரால் எவரேனும் பொய் கூறினால் அவர் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அஹ்மத், திர்மிதி உட்பட அனைத்து ஹதீஸ் கிரந்தங்களிலும் இது இடம் பெற்றுள்ளது)

நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்   

இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்