இன்டெக்ஸ்

 இப்னுமாஜா இன்டெக்ஸ்

Unicode Page

    பக்கம் - 2 (ஹதீஸ்கள் 11 முதல் 20 வரை)

அத்தியாயம்: முகத்திமா - முகப்பு

ஹதீஸ் எண்: 11

'நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த போது, ஒரு நேர்கோடு வரைந்தார்கள். பிறகு அந்தக் கோட்டுக்கு வலது புறமாக இருகோடுகளையும், இடது புறமாக இரண்டு கோடுகளையும் வரைந்தார்கள். பின்னர் நடுவில் உள்ள நேர்கோட்டில் தமது கையை வைத்துக் கொண்டு, இது தான் இறைவனின் நேரான வழியாகும் என்று கூறி விட்டு, 'இதுதான் எனது நேரான வழியாகும், இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்ற வேண்டாம்! (பலவழி செல்வது) அவனுடைய ஒரே வழியை விட்டும் உங்களை அகற்றி விடும்!' (அல்குர்ஆன் 6:153) என்ற வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள்' என்று ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அஹ்மத் 4142,4437,15312 தாரிமி 202, இப்னுஹிப்பான் 6,7 ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

பாடம்: 2 ஹதீஸ்களை கண்ணியப்படுத்துவதும் அதனை புறக்கணிப்பவர்களிடம் கடுமை காட்டுவதும்

ஹதீஸ் எண்: 12

எனது ஹதீஸிலிருந்து ஒரு ஹதீஸ் கூறப்படும் போது, 'எங்களுக்கும் உங்களுக்குமிடையில் அல்லாஹ்வின் வேதம் இருக்கிறது, அதில் ஏதேனும் அனுமதிக்கப்பட்டிருந்தால், அதை நாம் அனுமதிக்கப்பட்டதாக கொள்வோம். அதில் தடை செய்யப்பட்டவைகளை நாம் தடை செய்யப்பட்டதாகக் கொள்வோம்' என்று தன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு சிலர் கூற முற்படுவார்கள். எச்சரிக்கிறேன்! அல்லாஹ்வின் தூதர் தடுத்தவைகளும் அல்லாஹ் தடுத்தவை போன்றது தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக மிக்தாம் இப்னு மஃதீகரிப் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: திர்மிதி 2801, தாரிமி 586  ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது)

ஹதீஸ் எண்: 13

'நான் கட்டளையிட்ட, அல்லது தடுத்த ஒரு செய்தி ஒருவனுக்கு கிடைக்கும் போது, '(அதெல்லாம்) எனக்குத் தெரியாது அல்லாஹ்வின் வேதத்தில் எதை பெறுகிறோமோ அதையே பின்பற்றுவோம்' என்று ஆசனத்தில் சாய்ந்து கொண்டு (அதாவது அலட்சியமாக) ஒருவன் கூறக்கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூராபிவு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் திர்மிதி 2800, அபூதாவூத் 4605  ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது)

ஹதீஸ் எண்: 14

'நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது (இறைவனால்) நிராகரிக்கப்படும்' என்று நபி (ஸல்) கூறியதாக அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம் அஹ்மத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது)

ஹதீஸ் எண்: 15

பேரீத்த மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காக உள்ள 'ஒரு வாய்க்கால்' விஷயத்தில் ஸுபைர் (ரலி) மீது அன்சாரிகளைச் சேர்ந்த மனிதர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வழக்குக் கொண்டு வந்தார். (வழக்கு என்னவென்றால்) தண்ணீரை அதன் போக்கில் விட்டுவிட வேண்டும், (தடுத்து தன் தோட்டத்திற்குப் பாய்ச்சக் கூடாது) என்பது அன்சாரி மனிதரின் வாதம். (தனது தோட்டத்துக்கு) நீர் பாய்ச்சும் வரை வாய்க்காலை அடைத்துக் கொள்வேன், அதன் பிறகே திறந்து விடுவேன் என்று ஸுபைர் (ரலி) மறுக்கிறார். இதுதான் வழக்கு!)

ஸுபைரே! (உனது தோட்டத்திற்கு) நீ நீர் பாய்ச்சி விட்டு, அதன் பின் உன் பக்கத்துத் தோட்டத்தாருக்காக தண்ணீரை விட்டு விடு!' என்று நபி (ஸல்) அவர்கள் நீதி வழங்கினார்கள்.

'அல்லாஹ்வின் தூதரே! உங்களின் மாமி மகன் என்பதனால் தான் (ஸுபைருக்கு சாதகமாக) தீர்ப்பு வழங்குகிறீர்களா?' என்று அந்த அன்சாரி கேட்டார்.

(இதைக் கேட்டதும்) நபி (ஸல்) அவர்களின் முகம், நிறம் மாறியது. பின்னர் (ஸுபைரை நோக்கி) ஸுபைரே! உனது தோட்டத்திற்கு நீ நீர் பாய்ச்சிக் கொள். அதன் பின்பும் தண்ணீரை தடுத்துக் கொள்! அது வரப்பு (வழியாக நிரம்பி வழிந்து) செல்லட்டும்! என்று (கோபமாகக்) கூறினார்கள்.

'தங்களுக்குள் ஏற்பட்ட பிணக்குகளில் உம்மை நீதிபதியாக ஏற்று, நீ அளித்த தீர்ப்பு பற்றி தங்கள் உள்ளத்தில் அதிருப்தியும் கொள்ளாது, முழுமையாக கட்டுப்படும் வரை உமது இறைவன் மேல் ஆணையாக அவர்கள் விசுவாசிகளாக மாட்டார்கள். (4:65) என்ற வசனம் இவருக்காகவே இறங்கியதாக அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் கருதுகிறேன் என்று ஸுபைர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி 4585, முஸ்லிம் 2357, அபூதாவூத் 3630, இப்னுமாஜா 2480, திர்மிதி 1374, 5017 ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. புகாரி, திர்மிதி ஆகிய நூல்களில் 'ஹர்ரா' என்னும் இடத்தில் இருந்த வாய்க்கால் விஷயத்தில்' என்ற விபரம் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.)

ஹதீஸ் எண்: 16

'பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுவதைத் தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) கூறினார்கள். அதைக் கேட்ட அவர்களின் (பிலால் என்ற) மகன் 'நிச்சயமாக நாங்கள் பெண்களை தடுக்கத்தான் செய்வோம்' என்றார். உடனே இப்னு உமர் (ரலி) அவர்கள் கடும் கோபமுற்று, 'அல்லாஹ்வின் தூதருடைய செய்தியை நான் உனக்குக் கூறுகிறேன். நாங்கள் தடுப்போம் என்கிறாயா?' என மகனைக் கண்டித்தார்கள் என்று அவரது மகன் ஸாலிம் என்பார் அறிவிக்கிறார்.

(குறிப்பு: புஹாரி 858, முஸ்லிம் 442, தாரிமி 1279, அபூதாவூது 566, பைஹகீ 9908 முஅத்தா 465  ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. 'பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுவதைத் தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் போன்ற வாசகங்கள் மட்டும் இடம்பெற்றுள்ளது.)

ஹதீஸ் எண்: 17

அப்துல்லாஹ் இப்னு முகப்பல் (ரலி) அவர்களுக்கு அருகே அவர்களின் சகோதரி மகன் ஒருவர் (சிறுகற்களைத் தம் விரல்களால்) சுண்டிக் கொண்டிருந்தார். அதைக்கண்ட அப்துல்லாஹ் இப்னு முகப்பல் (ரலி) அவர்கள் இப்படி விளையாடுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்திருக்கிறார்கள். 'இதனால் எதனையும் வேட்டையாடவும் முடியாது, எதிரியை வீழ்த்தவும் முடியாது. மாறாக (எவரது) பல்லையாவது உடைத்துவிடும், (எவரது) கண்ணையாவது பறித்துவிடும்' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் எனக்கூறி தம் சகோதரர் மகனைத் தடுத்தார்கள்.

இதன் பின்பும் அவர்களின் சகோதரர் மகன் அதே காரியத்தை செய்யலானார். இதைக் கண்ட அப்துல்லாஹ் இப்னு முகப்பல் (ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் தூதர் தடுத்ததாக நான் உனக்குத் தெரிவித்த பின்னரும் நீ சுண்டி விளையாடுகிறாயா? இனிமேல் ஒருபோதும் நான் உன்னிடம் பேசவே மாட்டேன்' என்று கூறினார்கள் என்று ஸயீத் இப்னு ஜுபைர் என்பார் அறிவிக்கிறார்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

ஹதீஸ் எண்: 18

உபாதா இப்னுஸ்ஸாமித் (ரலி) என்ற நபித்தோழர் முஆவியா (ரலி) அவர்களின் தலைமையில் இத்தாலி (ரூம்) நாட்டுடன் போர் புரிந்து கொண்டிருந்தார்கள். அங்குள்ள மக்கள் 'தங்கக் கட்டிகளை தங்க நாணயத்திற்கும் வெள்ளிக் கட்டிகளை வெள்ளி நாணயத்திற்கும் நாணயமாற்று செய்து கொண்டிருப்பதைக் கண்டார்கள். 'மனிதர்களே! நீங்கள் வட்டியை உண்ணுகிறீர்கள்! சமமான அளவில் தவிர தங்கத்தை தங்கத்திற்கு விற்பனை செய்யக் கூடாது.

அவ்விரண்டுக்குமிடையில் (பெறும் போதும், கொடுக்கும் போதும்) ஏற்றத்தாழ்வு கூடாது. மேலும் (சம எடையில் உள்ள தங்கக்கட்டிகளையும், தங்க நாணயங்களையும்) தவணை முறையிலும் மாற்றலாகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கிறேன் என்று உபாதா (ரலி) குறிப்பிட்டார்கள்.

இதைக் கேட்ட முஆவியா (ரலி) அவர்கள் அபுல் வலீதே! தவணை முறையில் தங்க (நாணயத்தையும், தங்க கட்டியையும்) மாற்றம் செய்தால் தவிர இதில் வட்டிப்பிரச்சனை இருப்பதாக நான் கருதவில்லை' என்று கூறினார்கள்.

நான் நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். நீங்கள் உங்கள் சொந்தக் கருத்தைத் தெரிவிக்கிறீர்கள்! (இங்கிருந்து) அல்லாஹ் என்னைப் புறப்பட வைத்து விட்டால் என்மீது உனக்கு அதிகாரம் இருக்கும் நிலப்பரப்பில் உமக்குக் கீழ் நான் வாழமாட்டேன்' என்று உபாதா (ரலி) கூறினார்கள். அங்கிருந்து புறப்பட்டு மதீனாவைச் சென்றடைந்து விட்டார்கள்.

அபுல் வலீதே! ஏன் (மதீனாவுக்கு) வந்து விட்டீர்? என்று (அப்போதைய ஜனாதிபதி) உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அவர் நடந்த விபரங்களை எடுத்துச் சொன்னார்.

அபுல்வலீதே! உமது ஊருக்குத் திரும்பிச் செல்வீராக! நீரும் உம்போன்றவர்களும் இல்லாத நிலப்பரப்பை இறைவன் இழிவு படுத்துவானாக என்று உமர் (ரலி) கூறிவிட்டு, 'உமக்கு இவர் மீது எந்த அதிகாரமுமில்லை, இவர் கூறியவாறே மக்களுக்குச் சட்டமியற்றுவீராக! இவர் கூறுவதே சட்டமாகும் என்று முஆவியா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள்.

(குறிப்பு: இந்தக் கருத்து முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது)

ஹதீஸ் எண்: 19

நான் நபி (ஸல்) அவர்களைப் பற்றி எதையேனும் உங்களுக்கு அறிவித்தால் 'நபி (ஸல்) அவர்கள் தாமே அதை எடுத்து நடந்தவர்களாக-தாமே அதுபற்றி அஞ்சி நடந்தவர்களாக - தாமே அதைத் தெளிவு படுத்தியவர்களாக இருந்திருக்கிறார்கள்' என்று அவர்களைப் பற்றி புரிந்து கொள்ளுங்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஹதீஸ் எண்: 20

நான் நபி (ஸல்) அவர்களைப் பற்றி எதையேனும் உங்களுக்கு அறிவித்தால் 'நபி (ஸல்) அவர்கள் தாமே அதை எடுத்து நடந்தவர்களாக-தாமே அதுபற்றி அஞ்சி நடந்தவர்களாக - தாமே அதைத் தெளிவு படுத்தியவர்களாக இருந்திருக்கிறார்கள்' என்று அவர்களைப் பற்றி புரிந்து கொள்ளுங்கள் என அலீ இப்னு அபூதாலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்   

இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்