
| கட்டுரைகள் இன்டெக்ஸ் |
Unicode Page |
|
மாணவனுக்கோர் முக்கிய பாடம்
மௌலவி அலாவுதீன் பாக்கவி
தற்கொலை என்ற விஷயத்தை இந்த நேரத்திலே எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏன் தோன்றியது என்றால், சமீபத்திய செய்தித்தாள்களில் இந்த ஆண்டு பிளஸ்டூ தேர்வின் முடிவுகள் வெளி வந்த பிறகு கிடைக்கக் கூடிய தகவல்கள் என்ன சொல்கின்றன என்றால், எந்த வருடங்களை விடவும் இந்த வருடம் பிளஸ்டூ தேர்வில் தோற்றுப் போன மாணவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான்.
நாம் அதை செய்தித்தாள்களிலே படித்தும், டிவி, வானொலிகளில் கேட்கும் போதும் மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. வாழ வேண்டிய வயதிலே பிஞ்சு நெஞ்சத்திலே இந்த நஞ்சு விதைக்கப்பட்டு அவர்களுக்கு தற்கொலை என்பது ஒரு பாவம், ஒரு குற்றம் என்ற உணர்வும் இல்லாமல், தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய கருத்துக்கள் அவர்களுக்கு ஊட்டப்படாத காரணத்தினால் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
சென்னை போன்ற நகரங்களிலே சமூக ஆர்வலர்கள் ஸ்நேகா என்ற அமைப்பை உருவாக்கி, தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருப்பவர்களின் தற்கொலை எண்ணத்தை மாற்றுவதற்கு சில ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தற்கொலை செய்ய நிலைப்பவன் விண்ணப்பப் படிவத்தை கையில் எடுத்துக் கொண்டு, ஸ்நேகா அமைப்பிற்கு டெலபோன் செய்து விட்டு, நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று சொல்லிக் கொண்டா போவான்? அதுவெல்லாம் செய்ய முடியாதது. ஆரம்பத்திலேயே அவன் இதயத்திலே இது ஒரு தவறான பாதை என்ற சிந்தனை வந்து விட வேண்டும்.
இந்த உலகத்திலுள்ள எந்த வேதநூல்கள், எந்த அரசுகள், எந்த சமூக அமைப்புக்கள், தற்கொலையை முற்றிலும் தடை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்து வைத்திருக்கிறார்கள், என்றால் நிச்சயமாக இல்லை. அப்படியானால் இதற்கு தீர்வு எங்கே இருக்கிறது? இஸ்லாத்தில் இருக்கிறது. திருக்குர்ஆன், நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகளிலே தீர்வு இருக்கிறது.
11. இஸ்லாம் சொல்லும் தீர்வு:
திருமறைக்குர்ஆனை முஸ்லிம்கள் தங்களின் வாழ்வியல் நெறியாக, வேதமாக, இதில் உள்ள அல்லாஹ்வின் கட்டளைகளை தங்களின் உயிர் மூச்சாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் திருக்குர்ஆன் சொல்லுகிறது.
وَلآ تَقْتُلُواْ اَنْفُسَكُمْ ٠٠٠
'உங்களை நீங்களே கொன்று விடாதீர்கள்...' (சூரத்துன்னிஸா 4:29)
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
'யார் தமது கழுத்தை நெரித்துத் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரகத்திலும் கழுத்தை நெரித்துக் கொண்டிருப்பார். யார் தம்மைத்தாமே (ஆயுதத்தால்) தாக்கித் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரகத்திலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார்'. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1365)
இன்னொரு சந்தர்ப்பத்திலே,
தற்கொலை செய்து கொண்டவனின் ஜனாஸா கொண்டு வந்த பொழுது, இந்த ஜனாஸாவுக்கு தொழ வைக்க மாட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நாம் ஹதீஸ்களிலே பார்க்கிறோம். (அபூதாவூது 3185)
எந்தக் கஷ்டம் வந்தாலும், உடல் ரீதியாக உயிர் போகக்கூடிய நிலை வந்தாலும் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்பதையும் இஸ்லாம் கூறுகிறது.
போரிலே கலந்து கொண்ட ஒரு இஸ்லாமிய வீரர், இஸ்லாமிய ஜிஹாதிலே கலந்து கொண்டவர், அவர் எதிரிகளால் தாக்கப்பட்டு குற்றுயிராக களத்திலே கிடந்த போது, காயத்தின் வேதனையை தாங்கிக் கொள்ள முடியாமல் ஒரு வாளின் கைப்பிடியை தரையில் ஊன்றி மறுமுனையை தன் நெஞ்சில் அழுத்திக் கொண்டு களத்திலேயே உயிரை விட்டார் என்ற தகவலை நபி (ஸல்) அவர்கள் கேள்விப்பட்டவுடன் 'அவர் நரகம் போனார்' என்று சொன்னார்கள். (நூல்: புகாரி 2898)
இஸ்லாத்திற்காக தியாகம் செய்து ஜிஹாது செய்தவருக்குக் கூட தற்கொலை செய்து கொள்வதற்கு அனுமதி கொடுக்கப்பட வில்லை என்பதை இந்தச் சம்பவம் விளக்குகிறது.
அமீருக்குக் கட்டுப்படுவது:
அமீருக்குக் கட்டுப்படுவது என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட ஒரு விஷயம்.
நபி (ஸல்) அவர்கள் எத்தியோப்பியாவுக்கு நஜ்ஜாஷி மன்னரித்தில் ஒரு தூதுக்குழுவை மதீனாவிலிருந்து அனுப்பி வைத்தார்கள். அப்படிச் சென்ற அந்த தூதுக்குழுவானது தனது வேளைகளை முடித்துக் கொண்டு திரும்புகிற போது ஒரு இடத்தில் தங்குகிறார்கள். அந்த குழுவின் அமீரானவர் எல்லோருக்கும் ஒரு உத்தரவு போட்டார், 'அனைவரும் விறகுக்கட்டைகளை கொண்டு வாருங்கள்' என்று சொன்னார். அனைவரும் விறகுக் கட்டைகளை கொணடு வந்தார்கள். தீமூட்டச் சொன்னார். தீமூட்டினார்கள். தீ நன்றாக கொளுந்து விட்டு எரிகின்ற போது, 'ஒவ்வொருவராக உள்ளே இறங்குங்கள்' என்றார். நபித்தோழர்கள் அதிர்ந்து நின்று விட்டார்கள். 'ஏன் இப்படி அவர் தற்கொலைக்கு தூண்டுகிறார்' என்று எண்ணி யாரும் அவருக்கு கட்டுப்பட வில்லை. அந்தத் தூதுக்குழு மதீனாவிற்கு வந்த பிறகு நபி (ஸல்) அவர்களிடத்தில் இந்த நிகழ்;ச்சியைக் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்குச் சொன்னார்கள், 'நீங்கள் அந்த அமீருக்கு கட்டுப்பட்டு தீக்குள் இறங்கி இருப்பீர்;களானால் அந்த நெருப்பானது உங்கள் அத்தனை பேருக்கும் நரகமாக இருந்திருக்கும்' அதாவது நீங்கள் நரகத்திற்கு சென்றிருப்பீர்கள். என்றார்கள். (ஹதீஸின் கருத்து)
அமீரின் உத்தரவில் கூட தற்கொலைக்கு இடமில்லை.
உயிரா? மானமா?:
மனிதன் எப்போது தற்கொலை செய்து கொள்கிறானோ அப்படிப்பட்ட சூழ்நிலையையே இஸ்லாம் மாற்றி அமைக்கிறது. ஒருவன் மானம் போய் விட்டது என்கிறான். உயிரா மானமா? உயிரை விட மானம் பெரியது என்பது போன்ற வீர வசனங்களை பேசிப்பேசி தற்கொலை எண்ணத்தை இந்த சமுதாயத்தில் புகுத்தி இருக்கிறார்கள்.
உயிரா மானமா என்றால் மானம் போவதை விட உயிர் போவது பெரியது என்று தற்கொலை செய்து கொள்பவன் நினைக்கிறான்.
இதற்கு இஸ்லாத்தில் வழிகாட்டல் இருக்கிறது. மானம் போகக்கூடிய சூழ்நிலை வந்தாலும் - ராஜபுத்திர பெண்கள் தங்கள் கர்ப்பை காப்பதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்று முன்பு சொன்னோமே அதுபோன்ற - விஷயங்களுக்கெல்லாம் இஸ்லாத்தில் தீர்வு இருக்கின்றது. கர்ப்பை இழக்கக் கூடிய சூழ்நிலை வந்தாலும் அதை எதிர்த்து, அது எவ்வளவு பெரிய சக்தியாக இருந்தாலும் போராடுமாறு இஸ்லாம் சொல்லுகிறது. அப்படிப் போராடி, உயிர் வாழ்வது என்பது அவசியம் இல்லை, அவர்களால் கொல்லப்பட்டு செத்துப் போய் விடலாம், அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டவராக ஆகிவிட மாட்டார்.
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
'யார் ஒருவன் தனது மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக போராடி அதில் உயிர் துறக்கிறானோ அவன் ஷஹீது (உயிர்த்தியாகி)'.
இஸ்லாத்திற்காக தியாகம் செய்து கேள்வி கணக்கே இல்லாமல் சொர்க்கத்துக்கு போகக்கூடிய உயர்ந்த அந்தஸ்த்து ஷஹீதுக்கு கிடைக்கிறது.
அதையே சிறிது மாற்றிச் சொல்லிப் பாருங்கள். யார் மானத்தைக் காத்துக் கொள்வதற்காக தற்கொலை செய்து கொள்கிறானோ அவன் நரகத்திற்கு செல்கிறான்.
ஏனென்றால் அந்த கடைசிக் கட்டத்தில் கூட உன்னால் எதிரியை தீர்த்துக் கட்டி விட்டு உன் மானத்தைக் காப்பாற்றுவதற்கான சின்ன அணுவளவு வாய்ப்பாவது இருக்கும். கடைசி வரையிலும், கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரையிலும் அநியாயத்திற்கு எதிராக ஒரு மனிதன் போராடித்தான் தியாகம் செய்து வீரத்தை நிலை நாட்டி வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லுகிறதே தவிர இந்த தற்கொலையை மிகக் கேவலமாக வெறுத்து ஒதுக்குகிறது.
தற்கொலை செய்து கொண்டவன் சொர்க்கத்திற்கு போகவே முடியாது என்று கூறுகிறது.
இதை ஒரு குர்ஆன் வசனம் மிக அழகாகச் சொல்கிறது:
ومَنْ يَّقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيْهَا ٠٠٠
'யார் ஒருவன் வேண்டுமென்றே ஒரு முஃமினை கொலை செய்கிறானோ அவன் நரகத்திற்கு செல்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான்'. (சூரத்துன்னிஸா 4:93)
இதில் கவனிக்கக் கூடிய விஷயம் என்னவென்றால் அவன் யாரைக் கொலை செய்கிறான் என்று பாhக்கக் கூடாது. தற்கொலை செய்யும் ஒரு முஸ்லிம் தன்னை - ஒரு முஃமினைத் - தான் கொல்லுகிறான். இவன் நரகத்திற்கு தான் போவான்.
இன்னொரு கோணத்தில் பார்த்தால், ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் நடந்து விட்ட துக்க நிகழ்வுகளை நினைத்து அவன் தற்கொலை செய்து கொள்கிறான். இப்படிப்பட்டவர்களுக்கு இஸ்லாம் ஒரு அருமையான மருந்து வைத்திருக்கிறது. அது என்ன தெரியுமா?
நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பிறகு ஒரு துஆவை ஓதுமாறு கற்றுத்தந்திருக்கிறார்கள்.
أَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الهَمِّ وَالْحُزْنِ ٠٠٠
'அல்லாஹும்ம இன்னீ அவுது பிக மினல் கம்மீ வல் ஹுஸ்ன்' (நூல்கள்: புஹாரி, அபூதாவூது, திர்மிதி, நஸயி, அஹ்மது)
யா அல்லாஹ்! கம்மிலிந்தும் ஹுஸ்னிலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
கம் என்றால் எதிர் காலத்தில் நடக்க இருப்பதை குறிக்கும் வார்த்தையாகும். உதாரணமாக நாளைக்கு போலீஸ் விசாரணைக்கு வருமே என்று எண்ணி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்ளக் கூடியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள், அதைப் போன்றதாகும்.
ஹுஸ்ன் என்றால் கடந்த காலத்தில் நடந்து போன கசப்பான நிகழ்வுகளைக் குறிக்கும் சொல்லாகும்.
ஆக இதன் பொருளாவது, நாளை நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளை எண்ணி இன்றைக்கே கவலைப்படுவதிலிருந்தும், கடந்த காலத்தில் நடந்து போன கசப்பான நிகழ்வுகளால் ஏற்பட்ட கவலையிலிருந்தும் யாஅல்லாஹ் உன்னிடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன். என் மனதிலே அப்படிப்பட்ட கவலையை வைக்காதே, எனது மனதை எப்போதும் சந்தோசமாக வைத்து விடு.
தற்கொலைக்கு ஒருவனை ஆயத்தமாக்கக் கூடிய, தற்கொலை எண்ணமே ஒரு மனிதனுக்கு வராமல் தன்னம்பிக்கையை ஊட்டக்கூடிய - கவுன்சிலிங் - என்று சொல்லப்படுவது இந்த துஆவிலேயே இருக்கிறது.
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கக்கூடிய இன்னொரு செய்தியையும் முஸ்லிமில் பார்க்கிறோம்.
'உன்னுடைய காரியங்களை நன்றாக ஆலோசனை செய்து சிந்தித்து செயல்படு. அதற்கு பிறகு அல்லாஹ்வின் மேல் நம்பிக்கை வைத்து விட்டு உன்னுடைய செயலைச் செய். அதனால் சாதகமாகவோ பாதகமாகவோ முடிவுகள் ஏற்படலாம். அப்படி வந்தால் இதுதான் அல்லாஹ் நமக்கு நாடியது என்று நினைத்து பொருமையாக இரு. நான் இப்படிச் செய்திருந்தால் அப்படி ஆகியிருக்குமே அப்படிச் செய்திருந்தால் இப்படி ஆகியிருக்குமே என்று சொல்லாதிரு. அல்லாஹ் நாடியது எதுவோ அது நடந்தது என்று தான் சொல்ல வேண்டும்'.
மனிதன் அப்படி நடந்து விட்டதே, இப்படி நடந்து விட்டதே என்று நினைப்பதால் ஏற்படும் துக்கமே அவனை தற்கொலைக்கு இட்டுச் செல்கிறது. இப்படிப்பட்ட மனரீதியான மாற்றங்களை சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு நாம் போதிப்பதற்கு இஸ்லாம் நமக்கு சொல்லித் தருகின்றது.
இதையும் தாண்டி இன்னொன்று இருக்கின்றது. அதை இஸ்திகாரா என்று சொல்லுவார்கள்.
ஒரு மனிதன் ஒரு காரியத்தைச் செய்கிற போது தீர்வு தேடி அல்லாஹ்விடத்தில் செய்யக்கூடிய துஆ. அந்த துஆவை நபி (ஸல்) அவர்கள் சொல்லித் தருகிறார்கள்.
'யா அல்லாஹ்! இந்தக் காரியம் நன்மையானதாக இருக்குமேயானால் இந்தக் காரியத்தை எனக்கு நடத்தித்தா. என்னுடைய தீனுக்கும் இந்த துன்யாவின் நல்வாழ்க்கைக்கும் இந்த காரியத்தால் தீங்கு இருக்குமேயானால் இந்த காரியத்திலிருந்து என்னை பாதுகாத்திரு'
ஒரு மனிதன் கடுமையான முயற்சி செய்து ஒரு காரியத்தை செய்கிற போது அந்தக்காரியம் நடக்க வில்லையென்றால் மனம் வெறுத்து தற்கொலை செய்து கொள்கிறான். இந்த துஆவை ஓதும் போது அந்த விஷயம் கைகூடாமல் போகிறது என்று சொல்லப் போகும் போது, என்ன முடிவுக்கு வந்து விடுகின்றான்? அல்லாஹ்விடம் துஆச் செய்தோம். இந்த விஷயம் கைகூடினால் நமக்கு கேடு வரும் என்று நினைத்து தான் இதனை தவிர்த்து இருக்கிறான் என்று நினைக்க வேண்டும். இது எவ்வளவு அருமையான ஏற்பாடு. இப்படிப்பட்ட சிந்தனை வருகின்ற போது மனதில் சமாதானம் ஏற்பட்டு அவன் மனது நிம்மதி அடைகிறது. அதிர்ச்சியோ பதட்டமோ ஏற்பட்டு தற்கொலை செய்வதற்கான எண்ணமே அவனுக்கு வராது. மனிதன் உலகத்தில் நீதியாக வாழ்வதற்குரிய சூழல் ஏற்படும்.
இஸ்லாம் இன்னொரு விஷயத்தையும் சொல்கிறது.
சில விஷயங்கள் உங்களுக்கு கிடைக்காமல் தவறிப்போனால், அல்லது இருக்கும் சில விஷயங்கள் உங்களை விட்டு திடீரென்று நீங்கி விடுமானால் இப்படிப்பட்ட இழப்பு ஏற்பட்டு விட்டதே என்ற மனப்பதட்டத்திலேயே சில பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கு இஸ்லாம் ஒரு அருமையான தீர்வைச் சொல்லுகிறது.
'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள் உயிர்கள் விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால் பொருமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!' (அல்குர்ஆன் 2:155)
'(பொருமையுடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள்' (அல்குர்ஆன் 2:156)
இது அல்லாஹ்வின் சோதனை, அப்படிப்பட்ட சோதனை ஏற்படும் போது பொருமையோடு இருக்க வேண்டும் என்பதை இந்த வசனங்களில் சொல்கிறான்.
பொருமையோடு இருங்கள் என்றால் பொருள் என்ன? பொருமை இழந்து தற்கொலை செய்து கொள்ளாதீர்கள் என்பது தான் இதன் பொருளாகும்.
பொருமை இழக்கும் நேரத்தில் என்ன சொல்ல வேண்டும் என்பதையும் அல்லாஹ் சொல்லித் தருகின்றான். அதாவது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று சொல்லுகிற போது மனதில் ஒரு நிம்மதி கிடைக்கும்.
என்ன கிடைக்கும் தெரியுமா? இந்த வார்த்தைகளை சமுதாயத்திற்கு எந்த முறையில் கற்றுத் தருகிறார்கள் என்பதைப் பாருங்கள். நமக்கு 'இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்' என்பது தெரியும் ஆனால் நபி (ஸல்) அவர்கள் இன்னொன்றையும் கற்றுத் தருகிறார்கள். அது என்ன?
உம்மு சல்மா (ரலி) அவர்களின் கணவர் அபூசல்மா இறந்து விட்டார் என்ற செய்தி நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்த போது, வருத்தத்தில் இருந்த உம்மு சல்மா (ரலி) அவர்களிடத்தில், 'இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்' என்று சொல்லி விட்டு, 'அல்லாஹும்ம வஅஹ்லிப்லீ கைரன் மின்ஹா' - யா அல்லாஹ் இதை விட சிறந்த ஒன்றை அளிப்பாயாக! என்று துஆச் செய்யுமாறு சொன்னார்கள்.
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ ، أَللَّهُمَّ أْجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ ، وَأَخْلِفْ لِيْ خَيْرًا مِنْهَا ٠٠٠
இந்த ஹதீஸிலிருந்து நாம் 'இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்' என்று சொல்வதோடு 'அல்லாஹும்ம வஅஹ்லிப்லீ கைரன் மின்ஹா' என்று கூறி அல்லாஹ்விடத்தில் பொறுப்பை ஒப்படைத்து விட வேண்டும். (நூல்: முஸ்லிம் 1675)
யதார்த்தத்தில் பார்க்கும் போது, உம்மு சல்மா (ரலி) அவர்கள் சொன்னார்கள், 'நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த படி நான் சொன்னேன், அபூசல்மாவை விட சிறந்த கணவராக நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் வழங்கினான்'.
மனிதனுக்கு இழப்பு ஏற்படுகின்றது என்றால் அதற்கு பகரமாக அதைவிட சிறந்த ஒன்றை அல்லாஹ் வைத்திருக்கின்றான். அதை அடைவதை விட்டு விட்டு தற்கொலை செய்து கொள்கிறான். இதில் இன்னொரு விஷயமும் உள்ளது. சில விஷயம் நம்மை விட்டு போகிறது என்று சொன்னால், அதை இழப்பு என்று நினைக்கிறோம். அப்படியல்ல, அந்த விஷயம் நம்மிடம் இருந்தால் நமக்கு கெடுதல் ஏற்படும், நமக்குத்தான் கஷ்டம் அதனால் தான் அதை நம்மைவிட்டு நீக்கி விடுகின்றான்.
உதாரணமாக, ஒருவருடைய கையிலோ காலிலோ ஒரு வகையான நோயினால் அந்த உறுப்பு அழுகி விடும் போது, அந்தக் கையும் காலும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தான் அவர் நினைப்பார். ஆனால் அதன் உண்மை நிலையை அறிந்த மருத்துவர், இந்த கையும் காலும் இருந்தால் எதிர்காலத்தில அவருக்கு ஆபத்து, இப்பொழுதே நீக்கி விட்டால் இந்த சிறிய இழப்போடு போய் விடும் என்று சொல்லி ஆபரேசன் செய்து உறுப்புக்களை எடுத்து விடுகிறார்கள்.
அதனால் தான் அல்லாஹ் நம்மிடமிருந்து சில உறுப்புக்களையோ சில நிஃமத்துக்களையோ சில இன்பங்களையோ பிடுங்கி எடுத்து விடுகிறான். அதனால் நமக்கு எந்தக் கேடும் இல்லை, அதனால் நமக்கு நன்மை. இது நமக்கு தெரிவதில்லை.
இதையே அல்லாஹ் திருக்குர்ஆனில் ஒரு வசனத்தில் சொல்கிறான்.
'...நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம், ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும், ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனல் அது உங்களுக்கு தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்' (அல்குர்ஆன் 2:216)
இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் திருக்குர்ஆனில் சொல்லப்படுகிறது. அது மூஸா (அலை) சம்பந்தப்பட்ட சம்பவமாகும். மூஸா (அலை) அவர்களும் ஹில்ரு (அலை) அவர்;களும் பயணம் மேற்கொண்ட விபரத்தை அல்லாஹ் சொல்கிறான். அதில் ஒரு சிறுவனை ஹில்ரு (அலை) கொன்று விடுகிறார்கள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த முஸா (அலை) அவர்கள், 'கொலைக் குற்றமின்றி, பரிசுத்தமான ஒரு ஆத்மாவை கொன்று விட்டீர்களே! நிச்சயமாக நீங்கள் பெரிய கேடான ஒரு காரியத்தையே செய்து விட்டீர்கள்!' என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 18:74)
அதற்கு விளக்கமாக ஹில்ரு (அலை) அவர்கள், 'அந்த சிறுவனுடைய தாய் தந்தையர் இருவரும் முஃமின்களாக இருக்கிறார்கள், அவன் (வாலிபனாகி) அவ்விருவரையும் வழிகேட்டிலும் குப்ரிலும் சேர்த்து விடுவான் என்று நாம் பயந்தோம். இன்னும் அவ்விருவருக்கும் பரிசுத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறக்கக்கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாகக் கொடுப்பதை நாம் விரும்பினோம்'. (அல்குர்ஆன் 18:81,81)
அந்த சிறுவனைக் கொன்றதால், அந்த சிறுவனும் குற்றமற்றவனாக சொர்க்கத்திற்கு போவான். அந்த பெற்றோர்களும் நல்லவர்களாக முஃமின்களாக வாழ்ந்து நல்லறங்கள் செய்து சொர்க்கம் செல்வார்கள். ஆக இந்த மூவரும் சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்ற நல்ல காரியம் நடப்பதற்கு இந்த மரணம் என்பது ஒரு காரணமாக அமைந்திருக்கிறது.
நமக்குப் பார்ப்பதற்கு இது தெரியாது, மூஸா (அலை) அவர்களின் கண்ணோட்டத்தில் தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஹில்ரு (அலை) அவர்கள் அறிந்திருந்தது போன்று மற்றவர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக அல்லாஹ் திருக்குர்ஆனில் இந்த சம்பவத்தை குறிப்பிடுகிறான். அல்லாஹ் குர்ஆனில் ஒரு விஷயத்தைச் சொன்னால் மனிதர்களுக்கு அதில் படிப்பினை இருக்கிறது.
நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்றால், நம்மிடத்திலிருந்து ஒரு விஷயம் தவறுகிற போது, அதில் நிச்சயமாக ஒரு நன்மை இருக்கும், அதை விட சிறந்த ஒன்றை அல்லாஹ் நமக்கு தருவான்.
இந்த உணர்வுகள், குழந்தைப் பருவத்திலிருந்து போதிக்கப்படுமானால் தற்கொலை என்ற எண்ணத்திலிருந்து மனிதர்களை திருப்பி விடும். உதாரணமாக பரீட்சையில் தோல்வியுறும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள், இந்த மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் போதே இந்த பாடத்தை அவர்களுக்கு சேர்த்திருக்க வேண்டும்.
பாடப் புத்தகங்களில் எத்தனையோ விழிப்புணர்வு கட்டுரைகள் சேர்க்கப்படுகின்றன. குடிமைப் பயிற்சி, சமூக அறிவியல் போன்ற பாடங்கள் சேர்க்கப்படுகிறது, மனித உரிமைகள் பற்றிய பாடங்கள் சேர்க்கப்படுகிறது, சுற்றுப்புற சூழல் விழிப்புணர்வு பாடங்கள் சேர்க்கப்படுகிறது. இவ்வாறு உலகவியல் நிபுணர்களிடத்திலும் கல்வியாளர்களிடத்திலும் இந்த துறையில் கவனம் செலுத்தக் கூடியவர்களிடத்திலும் நாம் வைக்கக் கூடிய வேண்டுகோள் என்னவென்றால், தயவு செய்து நீங்கள் ஒன்பதாம் பத்தாம் வகுப்புக்களிலோ அல்லது பிளஸ் ஒன், பிளஸ்டூ வகுப்புக்களிலோ மணவர்களுக்கோர் முக்கிய பாடமாக 'தற்கொலை' என்ற பாடத்தை இணைத்து, தற்கொலையினால் மனித சமுதாயத்திற்கு ஏற்படக்கூடிய கேடுகள், அது பாவம், அது குற்றம் என்ற ரீதியிலே கருத்துக்களை தூவி நெஞ்சத்திலே பதிய வைத்தால், தேர்வின் முடிவுகள் வெளியானதற்கு பிறகு தற்கொலையை நாடக்கூடியவர்களின் எண்ணிக்கையை கணிசமான அளவு குறைக்க முடியும்.
ஒரு காலத்தில் அதை முற்றிலுமாக ஒழிக்கவே முடியும். இதை எல்லாக் கல்வியாளர்களும் சிந்திக்க வேண்டும்.
இது போக இன்னொரு காரியமும் அரசு உனடியாக செய்ய வேண்டும். பரீட்சையில் தோற்றுப் போன மாணவர்களை பல பேர் இன்சல்ட் (கிண்டல், கேலி) பண்ணுகிறார்கள். குடும்பத்தின் பெயரை கெடுத்து விட்டாய் என்றும், ஸ்கூல் பெயரை கெடுத்து விட்டாய் என்றும் நொந்து போய் இருக்கும் நெஞ்சத்திலே வேல் பாய்ச்சுவது போல அவர்களை சொல்லுகிற போது அவனது மனது வேதனைப்பட்டு அவன் தற்கொலையை நாடுகிறான்.
அவர்களுக்கெல்லாம் உடனடியாக தேர்வு முடிவுகள் வெளியாகும் போதே அந்தப் பள்ளியின் மூலமாகவே வெற்றி பெற்ற மாணவர்களையெல்லாம் பிரித்து வைத்து விட்டு, தோற்றுப் போன மாணவ மாணவிகளை அந்த பள்ளி பொறுப்பேற்று அதாவது அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரோ அந்த ஊர் நிர்வாகிகளோ உடனடியாக அவர்களை வீடுகளுக்குச் சென்று அழைத்து வந்து அவர்களையெல்லாம் ஓரிடத்தில் உட்கார வைத்து அவர்களுக்கு சிறிய ட்ரீட் அதாவது ஜுஸ் போன்ற சிற்றுண்டி வகைகளைக் கொடுத்து உபசரித்து, அவர்களிடத்தில் மனோ தத்துவ நிபுணர்களை அழைத்து வந்து, பேச்சின் மூலமாக எதிர்கால நம்பிக்கைகளை மனதில் ஊட்டி, இது தவறிப் போனதற்காக கவலைப்பட வேண்டாம். மாற்று வழிகள் எத்தனையோ இருக்கிறது என்று அவர்களின் பெற்றோர்களின் முன்னிலையில் சொல்லப்பட வேண்டும்.
பெற்றோர்களுக்கும் சில அறிவுரைகளை செல்லவும் வேண்டும். உங்கள் பிள்ளைகளை நோவினை செய்யும் வார்த்தைகளை நீங்கள் சொல்லாதீர்கள். இதை எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள். இது மட்டுமே வாழ்க்கையல்ல. இதில் தோற்றுப்போய் இருக்கிறான் என்றால் இதை விட சிறந்த பாதையை அல்லாஹ் அவனுக்காக வைத்திருக்கின்றான் என்ற நம்பிக்கையை ஊட்டும் விதத்திலே கல்வித்துறை ஒரு நடவடிக்கையை (இதுவரை இல்லாவிட்டால்) இனியேனும் எடுக்க வேண்டும் என்று நாம் அவர்களிடத்தில் பரிந்துரை செய்கிறோம்.
12.மகாத்மா காந்தி:
தேசத்தந்தை மகாத்மா காந்தி தனது நூல் சத்திய சோதனை என்ற நூலில் நகைச் சுவை உணர்வை புகழ்கிறார். நகைச்சுவை உணர்வு என்று ஒன்று மட்டும் இல்லாதிருந்தால் நான் எப்போதோ தற்கொலை செய்து கொண்டிருப்பேன் என்று சொல்கிறார். அவரை அறியாமலேயே தற்கொலை என்பது சாதாரணமான விஷயம் என்று சொல்லக் கூடியதைப் பார்க்கிறோம். அறிவாளிகளாக இருப்பவர்களே இதை சர்வசாதாரணமாக கருதியிருக்கிறார்கள்.
13.தற்கொலை செய்து கொள்ளும் இடம்:
கொடைக்கானலில் சூசைட் பாயிண்ட் என்றே ஒரு இடம் இருக்கிறது. சூசைட் பாயிண்ட்டுக்கு அருகில் மரத்தடியில் ஒரு அறிவிப்புப் பலகையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி இந்த இடத்தில் தான் தற்கொலை செய்து கொண்டார் என்று எழுதப்பட்டிருந்தது. நல்ல காரியத்தை செய்தால் அதில் எழுதி வைக்கலாம். தவறான முன்னுதாரணங்களை மக்களுக்கு மத்தியில் எடுத்து வைக்கும் போது, இந்த இடம் தான் தற்கொலை வசதி போல் இருக்கிறது! என்று நினைத்து பலர் தற்கொலை எண்ணத்தை தீவிரப்படுத்திக் கொள்கிறார்கள்.
சமீப கால செய்தித்தாள்களில் பார்த்தால் தற்கொலை செய்து கொள்ளக்கூடியவர்கள் கொடைக்கானலுக்குத்தான் போகிறார்கள், அங்கேயே தற்கொலையும் செய்து கொள்கின்றான்.
இந்த அடிப்படையில்; ஆசிரியர்களும் பெற்றோர்களும் சமூக சிந்தனையாளர்களும் உலகவியல் நிபுணர்களும் அரசும் சிறிய வயதிலிருந்தே தற்கொலை எண்ணத்தை அகற்றுவதற்கு பாடுபட வேண்டும்.
14.கண்தெரியாத இரண்டு பிள்ளைகள்:
கொடுங்கையூர் என்ற ஊரிலே தாயும் கண்தெரியாத இரண்டு பிள்ளைகளும் இருந்தார்கள். அந்தத் தாய் அவர்கள் இருவரையும் பராமரித்துக் கொண்டிருந்தாள். தான் இறந்து தனது இரண்டு கண்கள் பிள்ளைகளுக்கு உபயோக ஆகட்டுமே என்று நினைத்து அந்த தாய் கடிதம் எழுதி வைத்து விட்டு செத்துப்போனாள். அந்தக் கண்கள் அந்த குழந்தைகளுக்கு பொருந்த வில்லை என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்.
தாய் இருந்தாலாவது அந்த பிள்ளைகளுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தாள். அவள் இறந்த பிறகு அவர்கள் இருவரும் ஆதரிப்பார் இன்றி தெருவில் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு பத்திரிக்கையில் சொல்லப்பட்டிருந்தது.
தற்கொலை செய்து கொள்வதினால் ஒரு வழிகிடைக்கும் என்ற சிந்தனை உருவானதினாலேதானே அந்தத் தாய் தற்கொலை செய்து கொண்டாள்.
தற்கொலை செய்து கொண்டால் இந்த உலகத்திலும் மறு உலகத்திலும் அணுஅளவும் துரும்பளவும் எந்த பயனும் இல்லை என்பதை அவர்களது மனதில் பதிய வைக்க வேண்டும். அப்போது தான் இந்த சமுதாயத்தில் தற்கொலையை தடுக்க முடியும்.
15.பகுத்தறிவு இயக்கங்கள்:
பகுத்தறிவு இயக்கங்களான திராவிடக் கழகங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தக் காலத்தில் ஹிந்தித் திணிப்பை எதிர்த்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்கள் இவர்களைப் பார்த்து, 'தன் தேக்குமரத் தேகத்தை தீயின் செந்நாக்குகளுக்கு இறையாகக் கொடுத்த வீர இளைஞர்கள்' என்று இலக்கிய நடையில் பாராட்டினார்கள். தாளமுத்து, நடராஜன் என்ற இரண்டு பேர் அவ்வாறு தீக்குளித்து இறந்தார்கள். அதனை கேட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு அதுவும் தியாகத்தின் பால் பட்ட செயல்தான் என்ற எண்ணத்தை அவர்களை அறியாமலேயே உருவாக்குகிறார்கள்.
பகுத்தறிவுக் கழகம் பகுத்தறிவுவாதிகள் என்பது தான் இவர்களது பெயர்களாகும். தங்களின் தலைவர்கள் சிறைபட்டார்கள் என்றால் இப்படிப்பட்ட இளைஞர்கள் தான் தீக்குளித்து சாகிறார்கள். தொண்டர்கள் யாரும் தீக்குளிக்காதீர்கள் என்று வெறும் பேச்சளவில் அறிக்கையை விட்டு விட்டு அவனது குடும்பத்தினருக்கு நலநிதியைக் கொடுப்பார்கள்.
16.அரசு ஊழியர்கள்:
அரசு ஊழியர்கள் கூட அரசாங்கத்தை எதிர்த்து தங்களது கோரிக்கையை முன்வைத்து போராட்டங்கள் நடத்துகிறார்கள். இவர்கள் தங்களது பந்தல்களில் உட்கார்ந்து கொண்டு பெரிய அறிவிப்புப் பலகையில், 'சாகும் வரை உண்ணா விரதம்' எழுதி வைத்துக் கொண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி என்றால் என்ன பொருள், 'தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்' என்பது தானே.
17.மாணவர்கள் போராட்டம்:
மண்டல்கமிஷன் அறிக்கையை எதிர்த்து மாணவர்கள் டில்லியிலே போராட்டம் நடத்தினார்கள். அப்போது குல சுவாமி என்ற இளைஞன் பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்து கொண்டான். கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்து கொள்வது இந்த சமூகத்தில் தியாகமான செயலாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
இது தான் இளைஞர்களை சிறு வயதிலே வழிகெடுத்து சின்னச் சின்ன விஷயங்களுக்காக பல்வேறுபட்ட முறையில் தூக்க மருந்து சாப்பிடுவது, பெட்ரோலை ஊற்றிக் கொல்வது, பூச்சி மருந்து சாப்பிடுவது, சயனைடு சாப்பிடுவது, தூக்கில் தொங்குவது போன்ற முறையில் தற்கொலை செய்து கொள்ள வைக்கிறது.
ஒரு மனிதனின் இழப்பால் ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு துன்பம் ஏற்படுகிறது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு உயிரை இழப்பதால் ஒரு குடும்பத்தில் பெரிய திருப்பங்கள் ஏற்பட்டு அந்த குடும்பம் எந்த அளவுக்கு தாழ் நிலைக்குப் போகின்றது என்பதை சிந்திக்க இவர்கள் தவறிவிடுகிறார்கள்.
ஆகவே நாம் சொல்ல வருவது என்னவென்றால், தற்கொலை என்பதற்கு இஸ்லாம் ஒன்றுதான் தீர்வு வைத்திருக்கிறது. இஸ்லாத்தில் தான் மருந்து இருக்கிறது. அதனை அறிந்து கொள்வதோடு மற்றவர்களுக்கு இதனை எடுத்துச் சொல்ல அல்லாஹ் நமக்கு பேருதவி புரிவானாக!
நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்