
| கட்டுரைகள் இன்டெக்ஸ் |
Unicode Page |
|
மாணவனுக்கோர் முக்கிய பாடம்
மௌலவி அலாவுதீன் பாக்கவி
மனிதர்கள் இந்த உலகத்திலே வாழ்வதற்காக படைக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படித்தான் திருமறைக்குர்ஆனும் சொல்லிக் காட்டுகிறது. மனிதர்கள் வாழ்வதற்காகத்தான் இந்த உலகமே படைக்கப்பட்டிருக்கிறது. இந்த வானம், பூமி, மலைகள், காற்று நீர், தாவரங்கள் மற்றும் அனைத்தும் மனிதனின் வசதிக்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே மனிதன் இந்த உலகத்திலே வாழ்ந்துதான் தீர வேண்டும். அல்லாஹ் எதுவரை அவனுக்கு தவணையை விதித்திருக்கிறானோ, அவனது உயிரை கைப்பற்றும் நேரம் வரை இவ்வுலகத்தில் எவ்வளவு காலம் வாழ அல்லாஹ் அனுமதிக்கிறானோ அப்போது வரை அவன் வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்பது இஸ்லாத்தின் கோட்பாடு.
எந்த சூழ்நிலையிலும், எந்த சந்தர்ப்பத்திலும், எவ்வளவு நெருக்கடியான நிலையிலும் மனிதன் தன்னுடைய வாழ்வை தானே இடைநிறுத்திக் கொள்வதற்கு, தன்னைத்தானே மாய்த்துக் கொள்வதற்கு, தற்கொலை செய்து கொள்வதற்கு இஸ்லாத்தில் துரும்பளவு கூட இடம் இல்லை.
இதை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பாக நபி (ஸல்) அவர்கள் ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார்கள், திருமறைக் குர்ஆனும் இதைச் சொல்லுகிறது.
அதேநேரத்தில் இந்த உலகத்தில் சர்வசாதாரணமாக தற்கொலைகள் காணக்கூடியதாக இருக்கிறது. இது நாடு, இனம், மொழி என்ற எல்லைகளையெல்லாம் கடந்து உலகம் முழுவதிலும் தற்கொலை என்பது நடந்து கொண்டிருப்பதை சர்வசாதாரணமாக பார்க்க முடிகிறது.
இன்றைக்கு இருக்கின்ற சமூக ஆய்வாளர்களும், அறிவு ஜீவிகளும் சமுதாய சீர்திருத்தவாதிகளும் 'தற்கொலை என்பது தவறு' என்பதை மீடியாக்கள் மூலமாக எழுதவும் பேசவும் தொடங்கி இருக்கிறார்கள் என்றாலும் இவர்களது முயற்சி எந்த அளவுக்கு சமுதாயத்திலே தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது, எந்த அளவுக்கு உலகத்தில் நிகழும் தற்கொலைச் சம்பவங்களை குறைத்திருக்கிறது என்ற கணக்குகளை பார்க்கும் போது எல்லாப் பிரச்சாரங்களுமே தோல்வியில் தான் முடிந்திருக்கிறது. ஏனெனில் அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் கொடுக்கும் புள்ளி விவரங்களில் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலைச் சம்பவங்கள் கூடிக்கொண்டே செல்வதைப் பார்க்க முடிகிறது.
மனிதர்கள் ஏன் இப்படிப்பட்ட
தற்கொலைச் செய்யும் மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள்? தற்கொலையை ஒரு ஆயுதமாக அல்லது
வாழ்வியல் பிரச்சனைக்கு ஒரு தீர்வாக ஆண்களும் பெண்களும் தேர்தெடுப்பதற்கான உளவியல்
மற்றும் சமூக ரீதியிலான காரணங்கள் என்ன? என்பதை நாம் இப்போது சிந்திக்க
கடமைப்பட்டுள்ளோம்.
ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்?
1. இன்னொருவரை பழிவாங்குவதற்காக:
அதாவது மனைவி தற்கொலை செய்து கொண்டால் கணவன் கஷ்டப்படுவான் என்று நினைத்தோ மனைவி விதவையாகட்டும் என்று நினைத்தோ, மனைவியை பழிவாங்கும் நோக்கிலோ கணவன் தற்கொலை செய்து கொள்வதைப் பார்க்கிறோம். இது போன்று வேறு சம்பவங்களும் இந்த விதத்தில் அடங்கும்.
2. மானப்பிரச்சனை:
நமது சின்னஞ்சிறிய வயதிலிருந்து இந்த சமூகத்தில் நாம் பார்க்கக் கூடியதும், சமுதாயத்தின் கருத்துக்களும் தற்கொலையை நியாயப்படுத்தக் கூடிய விதத்தில் அமைந்துள்ளதைப் பார்க்கலாம். உதாரணமாக, ஒருவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்வானேயானால் அவனை மானஸ்தன் என்று அவனை மதித்து நமது ஊர்களில் சர்வ சாதாரணமாக சொல்லும் அவலச் சூழ்நிலையை நாம் பார்த்து வருகின்றோம்.
அவனும் அவனது குடும்பமும் கவுரவமானவர்கள், மானம் பரிபோகும் நிலை ஏற்படுமானால் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் இதோ தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டான். மானத்திற்காக உயிர் விட்டது மரியாதைக்குறிய செயல் என்ற மதிப்பீடுகளைத் தான் சமூகம் வைத்திருக்கின்றது. பொதுவாகவே பலர் சொல்லிக் கொள்வார்கள், 'நாங்கள் கவரிமான் ஜாதி', 'ஒரு மயிர் உதிர்ந்தால் கூட நாங்கள் உயிருடன் இருக்க மாட்டோம்' என்று சொல்லி மக்கள் பெருமைப் பட்டுக் கொள்வதைப் பார்க்கிறோம். இவைகளெல்லாம் தற்கொலையை மறைமுகமாக தூண்டக்கூடிய கருத்துக்களாகும்.
இதனால் அறிந்தோ அறியாமலோ இந்த சமுதாயத்தில் தற்கொலை என்பது ஒரு தீர்வு என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தற்கொலைக்கு மதங்கள் சொன்ன தீர்வு:
எத்தனையோ மதங்கள் எத்தனையோ விஷயங்கள் குறித்து நல்ல வழிகாட்ட முயற்சித்திருந்தாலும் தற்கொலை விஷயத்தில் எந்த மதமும் சரியான பாதையை காட்டியதாக நமக்கு தெரிய வில்லை, இஸ்லாத்தைத் தவிர.
3. இந்து மதத்தில் தற்கொலை:
முற்காலம் தொட்டு இந்தக் காலம் வரை இந்து ஞானிகள், யோகிகளும், முனிவர்களும், சாமியார்களும் மிகச் சிறந்த இறப்பாக, மிகச்சிறந்த மரணமாக கடவுள்களின் பாதார விந்தங்களை அடைவதற்கு மிகச்சிறந்த வழியாக கருதியது என்னவென்றால் 'வடக்கிருதல்' என்ற முறையாகும்.
அதாவது, ஒருவன் ஒரு குறிப்பிட்ட திசையை தேர்ந்தெடுத்து கடவுளையே தியானித்த வண்ணம் ஒரே இடத்தில் அமர்ந்து உண்ணாமல் உறங்காமல் ஓய்வெடுக்காமல் இன்ன பிற தேவைகளை பூர்த்தி செய்யாமல் கடவுளையே தியானித்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சித்தரவதைப்பட்டு உயிரை விடுவது இருக்கிறதே, அதற்குப் பெயர் தான் வடக்கிருத்தல் என்று சொல்லுவார்கள். பழைய இலக்கியங்களிலும் கூட இது சொல்லப்பட்டிருக்கிறது.
முனிவர்கள் மட்டும் அல்லாமல் மன்னர்களும் கூட ஒரு குறிப்பிட்ட காலம் வந்தவுடன் தமது அரச பொறுப்புக்களையெல்லாம் துறந்து விட்டு அல்லது பிள்ளைகளிடத்திலோ, அவர்களது இளவல்களிடத்திலோ ஒப்படைத்து விட்டு வடக்கிருந்து செத்தார்கள் என்ற பழைய வரலாறுகளையெல்லாம் பழைய இலக்கயங்களில் காண முடிகிறது.
இதன் இன்னொரு பெயர் தான் தற்கொலை. இது கூட இன்னொரு சமூகத்திலே தாக்கத்தை ஏற்படுத்தி அது நியாயமான காரியம் தான் என்று மக்களை நினைக்க வைத்துள்ளது.
4. இந்திய வரலாற்று நிகழ்வுகள்:
ராஜபுத்திர வம்சத்தைச் சார்ந்த பெண்கள், அந்தப்புற மகளிர் இவர்களெல்லாம் எதிரி நாட்டு மன்னன் படையெடுத்து தன்னுடைய நாட்டை கைப்பற்றி விட்டால், தனது கணவன் போரிலே கொல்லப்பட்டு விடுவானேயானால், எதிரிகளின் கைகளில் சிக்காமல் இருப்பதற்கு - இன்னும் சொல்லப்போனால் எதிரிகளால் மனபங்கப்படுத்தப்படாமல் இருப்பதற்காக அவர்கள் தீயை வளர்த்து அந்த தீக்குள் தங்களை மாய்த்துக் கொண்டு உயிர் விட்ட நிகழ்வுகளெல்லாம் வரலாறுகளிலே பதிவு செய்யப்பட்டு இவைகளெல்லாம் உயர்ந்த நடை முறைகள், நெறிமுறைகள், கற்புக்கரசிகள் கைகொள்ள வேண்டிய வாய்மையான நெறிமுறைகள் என்று போதிக்கப்படக் கூடிய சூழ்நிலையை நாம் கண்டு வருகின்றோம்.
இந்த சம்பவங்கள் கூட கற்பை மானத்தை காத்துக் கொள்வதற்கு தற்கொலை ஒரு வழிமுறை என்ற எண்ணத்தை கருத்தாக்கத்தை இந்த சமூகத்தில் ஏற்படுத்தி இருக்கிறது.
5. உடன்கட்டை ஏறுதல்:
பழங்காலத்தில் இந்து மதத்தில் இருந்து வந்த நடை முறை உடன்கட்டை ஏறுதல் என்பதாகும். கணவன் இறந்து விட்டால் அவனை சிதையிலே வைத்து தீமூட்டி அவன் உடலை எரிக்கின்ற போது மனைவியையும் அந்த சிதையிலே பாய்ந்து மாய்த்துக் கொள்வதை உடன்கட்டை ஏறுதல் என்று சொல்வார்கள். ஆங்கிலேயர்கள் காலத்தில் அது தடை செய்யப்பட்டது என்றாலும் கூட இன்றைய காலத்திலும் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் ரூப்கன்வர் என்ற பெண்மணி சிதையிலே உட்கார்ந்து எரிந்த காட்சியை எல்லா தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் புகைப்படமாக வந்து இந்த உலகத்தையே ஒரு கலக்கு கலக்கியதை நாம் கண்டோம்.
சமூக சீர்திருத்தவாதிகள் இந்த செயலை கண்டித்தாலும் கூட விஜயராஜ சிந்தியா என்ற பழைய ராஜவம்சத்தை சார்ந்தவர் இந்த செயலை நியாயப்படுத்தி பத்திரிக்கைகளில் பேட்டி கொடுத்தார். இதை ஒரு தியாகம் என்று சொன்னார்.
இதே விஷயத்தை பத்திரிக்கையாளர்கள் பழைய காஞ்சி சங்கராச்சாரியாரிடம் கேட்ட போது அவரும் கூட இதை நியாயப்படுத்தினார்.
இது மட்டுமல்லாமல் ரூப்கன்வர் என்ற பெண்ணை கௌரவிக்கும் விதத்தில் கோவில் ஒன்றைக் கட்டி சதிமாதா என்ற பெயரில் வழிபாடுகள் கூட செய்ய ஆரம்பித்தார்கள்.
மிகச் சமீபத்தில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் இது போன்ற சம்பவம் நடந்திருக்கிறது, அந்தப் பெண் தானாக அதில் விழுந்தாளா? அல்லது கூடி இருந்தவர்கள் அவளை தீக்குள் தள்ளி விட்டார்களா? என்ற விசாரணையை போலிஸ் நடத்தி வருகிறது.
இந்தச் செயல் எல்லாம் தற்கொலை என்பது எல்லாவிதத்திலும் நியாயமானது தான், அது ஒரு மகத்தான தியாகம் தான், மரணத்திற்குப் பிறகும் கூட தமக்கு புகழ் கிடைத்துக் கொண்டிருக்கும் விஷயம் என்ற சிந்தனையை இந்த சமுதாயத்தில் விதைத்திருப்பதை நாம் கண்டு வருகின்றோம்.
6. இலக்கியங்கள்:
இலக்கியங்கள் கூட தற்கொலையை நியாயப்படுத்தக் கூடிய சூழ்நிலையை பார்க்கிறோம். சிலப்பதிகாரத்தில் பாண்டிய மன்னன் கோவலனுக்கு தவறான தீர்ப்பு வழங்கிய பின் கோவலன் கலுவேற்றப்பட்டான் என்ற செய்தியை அறிந்த கண்ணகி மன்னனிடம் நியாயம் கேட்டாள். தான் செய்த பிழையை தெரிந்து கொண்ட பாண்டிய மன்னன் அவ்விடத்திலேயே உயிரை விட்டான் என்ற செய்தியை நாம் காண்கிறோம். அந்த இடத்திலேயே உயிரை விட்டான் - தான் நினைத்த மாத்திரத்தில் யாராலும் உயிரை விட முடியாது. அப்படியானால் பாண்டிய மன்னன் தற்கொலையே செய்திருக்கிறான் என்பதை நம்மால் விளங்க முடிகிறது. அவன் உயிர்விட்டவுடன் பட்டத்து ராணியான கோப்பெருந்தேவியும் தானும் உயிரை விட்டாள் என்பதையும் அதுவும் தற்கொலையாகவே இருக்க வேண்டும் என்பதை விளங்கிக் கொள்கிறோம்.
இந்த செய்திகள் எல்லாம் பெருமைக்குரியவைகளாக இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டு பள்ளிக்கூடத்து பாடங்களிலும் கூட சொல்லிக் கொடுக்கப்டுகிறது. பிஞ்சு உள்ளங்களில் தற்கொலையை அவர்களையும் அறியாமல் இந்த இலக்கியங்கள் மூலம் திணிக்கப்படுகின்றது.
இவைகள் அனைத்தும் உதாரணங்களுக்காக ஒரு சிலவற்றை மட்டும் நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன்.
7. புத்த மதம்:
அறிவுப் புரட்சியை இந்தியாவிலே விதைத்தவர் கௌதம புத்தராவார். நாளாந்த பல்கலைக்கழகத்திலே அறிவு ரீதியான தர்க்க ரீதியான அறிவுப் புரட்சியை இந்தியாவில் உருவாக்கியவர்கள். இந்து மதத்திற்கு எதிராக இயக்கம் கண்டவர்கள். இவர்கள் கூட தற்கொலைக்கு ஒரு காரணமாக இருக்கிறார்கள். இதற்கு ஒரு வரலாற்றுச் சான்று இருக்கிறது. சிறிது காலத்திற்கு முன்பு திபெத்தை சீனா ஆக்கிரமித்த போது லாமா என்று அழைக்கப்படும் அவர்களது மதகுருமார்கள் பதினேழு (17) பேர் பட்டப்பகலிலே நடுவீதியிலே உட்கார்ந்து சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக - அதற்கு எதிர்ப்பை காட்டுவதற்காக, தங்களது தேச பக்தியை காட்டுவதற்காக, மத விசுவாசத்தை காட்டுவதற்காக பெட்ரோலை ஊற்றி தங்களைப் பற்ற வைத்து எரிந்து போன காட்சியை காண முடிந்தது.
அவர்களது மதம் தற்கொலை செய்து கொள்வது தவறு என்பதை அவர்களுக்கு போதித்து இருக்க வில்லை.
8. இலங்கை:
இந்து மதத்திலே ஆழ்ந்த பற்றும் நம்பிக்கையும் உடைய ஒரு பகுதியினர் தான் தமிழ்ஈழத்திற்காக போராடும் விடுதலைப்புலிகள். இந்த விடுதலைப்புலிகளின் போராளிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளில் ஒன்று தான் எதிரிகளிடத்தில் மாட்டுகின்ற போது தற்கொலை செய்து கொள்ள வேண்டும். அதற்காகவே நிரந்தரமாகவே அவர்களின் கழுத்துகளில் சயனைடு குப்பிகளை கட்டி வைத்திருப்பார்கள். சிக்கல் ஏற்படுகின்ற போது உடனே கடித்துக் கொண்டு செத்து விடுவார்கள். இதனை அவர்களது பாஷையில் 'குப்பி கடித்தான்' என்பார்கள். ஆக இதுவும் தற்கொலை தான். அந்த நேரத்தில் எதிரியை எதிர்த்துப் போராடு என்று அந்த இயக்கம் அவர்களுக்கு சொல்லித்தர வில்லை.
இதே விடுதலைப்புலிகள் இயக்கம் 1970 களிலே யாழ்பாணம் பகுதியில் ஒரு பந்தலை அமைத்து, அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரனின் ஆசியோடு 20 வயது இளைஞனை சாகும் வரை உண்ணா விரதம் இருக்கச் செய்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவனது உணர்வுகள் குறைந்து, கடைசி வரை அவன் உண்ணாமல் பருகாமல் துடிதுடித்து செத்ததை மீடியாக்கள் படம் பிடித்து உலகுக்கு காட்டின. இந்த உலகம் அதைப் பார்த்து மிகப் பெரிய அதிர்ச்சியை வெளிப்படுத்தியது.
இதை விடுதலைப்புலிகளின் தியாகம் என்றும், இளைஞர்கள் தங்களின் இயக்கத்திற்கு செய்யும் கடமை என்றும் சித்தரிக்கப்பட்டது. 20 வயதுடைய இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட செயல் பெரிய வீராதீரமான செயல், இது தியாகத்துக்குரிய செயல் என்று புகட்டப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.
அவர்களை அறியாமலேயே இவைகளெல்லாம் தற்கொலை எண்ணத்தை இந்த சமுதாயத்தில் விதைத்திருக்கிறது. இவர்களெல்லாம் இதற்கு காரணமான முன்னோடிகளாக இருப்பதைப் பார்க்கிறோம்.
9. கிருத்துவ மதம்:
தற்கொலையைப் பற்றி கிருத்துவ மதத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? என்பதை அறிந்து கொள்ள இந்த சம்பவம் ஓர் உதாரணமாகும். யேசுவின் 11 சீடர்களிலே யூதாஸ்காரியத் என்ற ஒருவரும் இருந்தார். இவர் தான் யேசுவைக் காட்டிக் கொடுத்தார். யேசு மன்னரிடத்திலே பிடிபட்ட பிறகு வருத்தப்பட்ட யூதாஸ்காரியத் துக்கம் தாங்க முடியாமல் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று பைபிள் கூறுகிறது.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், யேசுவின் முதல் நிலைச் சீடர்களிலேயே ஒருவர் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறார் என்றால் பைபில் கூற்றுப்படி யேசு அதை தடுத்திருக்க வில்லை. ஏனென்றால் தற்கொலை செய்து கொள்வது ஒரு பாவச் செயல் என்றால் அவர் செய்திருக்க மாட்டார். அவர் தற்கொலை செய்திருக்கக் கூடாது, அவரது பாவமீட்சிக்கு வேறு வழி இருப்பதாக அவர்களுக்கு போதிக்கப்பட வில்லை. அவ்வாறு போதித்திருந்தால் அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார்.
10. அமெரிக்கா:
அமெரிக்காவில் ஒக்லஹோமா நகரில் ஒரு நவீன சாமியார், ஒரு புதிய மதத்தை உருவாக்கினார். அது ஒரு அறிவுப்பூர்வமான மதம் என்று அறிந்து பெரிய பெரும்பெரும் புள்ளிகள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் போன்றவர்கள் அந்த மதத்தில் சேர்ந்தார்கள். ஒரு நாள் அந்த நவீன சாமியார் என்ன செய்தான் என்றால், ஒரு மண்டபத்தில் தனது அத்தனை சீடர்களையும் அழைத்து, அத்தனை பேருக்கும் சயனைடு விஷம் கலந்த காக்டெய்ல் ஜுஸை கொடுத்து, கடவுள் அழைக்கிறார், எல்லோரும் இதைக் குடித்து நமது கடவுளை உடனடியாக காண வேண்டும் என்று சொல்லி ஏறத்தாழ 130 பேரைக் கொன்றான். இந்த துயரச் சம்பவம் உலகத்தையே அதிர்ச்சியுறச் செய்தது. அறிவாளிகள் கூட தற்கொலை செய்யும் விஷயத்தை தவறு என்பதை புரிந்து கொள்ள தவறி விட்டார்கள். யாரும் அவர்களுக்கு இதை போதிக்க வில்;லை.
ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால, சிறுவயதிலிருந்தே சமூகத்தின் எல்லா கோணங்களிலிருந்தும் தற்கொலை செய்து கொள்வது மிகப்பெரிய குற்றம், தற்கொலை செய்து கொண்டால் அதற்குப் பிறகு மிகப்பெரிய தண்டனை இருக்கிறது என்பது சொல்லப்பட வில்லை.
சாதாரணமாக நமது ஊர்களில் கடன் கொடுத்தவன் அதை திரும்ப வாங்கச் செல்லும் போது கூட, 'உனக்கு மானம் ரோசம் இருக்கா? உனக்கு ஒரு முழம் கயிறு கிடைக்க வில்லையா?' என்று கேட்கிறார்கள். இந்த உதாரணம் கூட எதைக் காட்டுகிறது என்றால் தற்கொலை கூட ஒரு வழி, பாதை, மனிதன் செய்யக்கூடிய காரியம் தான், அது ஒன்றும் தவறல்ல என்ற சிந்தனை மக்களிடம் இருக்கிற காரணத்தால் தான் இவ்வாறு கேட்கிறார்கள். அதற்கு பதிலாக எப்படி சொல்லி இருக்க வேண்டும். என் கடனை திருப்பிக் கொடுப்பதற்கு உழைத்து சம்பாதிக்க உனக்கு தெம்பு இல்லையா? ஒரு கம்பெனியிலே வேலை இல்லையா? வெளிநாடு இல்லையா? அங்கே போய் சம்பாதிக்க! இப்படிக் கேட்காமல் ஒரு முழும் கயிறு இல்லையா? என்பது சமூகத்தில் சர்வ சாதாரணமாக சொல்லப்படுவதை பார்க்கிறோம்.
இந்த மனித சமுதாயத்தை வாழ வைக்க வேண்டும் என்று இஸ்லாம் விரும்புகிறது.
அது இந்த மனித சமுதாயத்திற்கு எப்படிப்பட்ட அறிவுரைகளைக் கூறுகிறது என்பதை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.
நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்