இன்டெக்ஸ்

 கட்டுரைகள் இன்டெக்ஸ்

Unicode Page

BBC தொகுப்பாளர் முழு மன்னிப்பு கேட்க வேண்டும்

ஐக்கிய ராஜ்ய முஸ்லிம்கள் கோரிக்கை

    ராபர்ட் கில்ராய் - ஸில்க் என்பவர் 'கில்ராய்' என்ற தலைப்பில் பிரபலங்களை பேட்டி காணும் பிரபலமான பிபிசி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன் இலண்டனிலிருந்து வெளிவரும் 'சண்டே எக்ஸ்பிரஸ்' என்ற பத்திரிக்கையில் எழுதியிருந்த ஒரு கட்டுரை, இலண்டன் முஸ்லிம்களை கிளர்ந்தெழச் செய்துள்ளது.

    கில்ராய் தன்து கட்டுரையில் அரபுகளை (அரபு மக்களை - முஸ்லிம்களை) 'தற்கொலைக் குண்டர்கள்' 'பெண் அடக்கு முறையாளர்கள்' 'மிருகத்தனமாக உறுப்புக்களை சிதைப்பவர்கள்' என்பன போன்ற கடுமையான வார்த்தைகளால் வர்ணித்துள்ளார். அத்துடன் வெகு சில அரபு நாடுகளே உலக நன்மைக்காக சிறிய பங்காற்றியுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    இது அங்குள்ள முஸ்லிம்கள் மத்தியில் பெரும் புயலை உருவாக்கியுள்ளது. இத்தகைய எதிர்ப்பின் காரணமாக பிபிசி நிhவாகம் அவரது வழக்கமான நிகழ்ச்சியை ரத்து செய்தது. இதற்கிடையில் தான் எழுதிய கட்டுரை தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருப்பதாகவும் அதற்காக தான் வருந்துவதாகவும் கில்ராய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    ஆனால் இங்கிலாந்து முஸ்லிம் கவுண்சிலின் தலைவர் இக்பால் சக்ரானைன் இதனை 'முழுமையான வருத்தமாக' கணிக்க முடியாதென்கிறார். பிரிட்டிஷ் முஸ்லிம் கவுண்ஸில் என்பது 350 முஸ்லிம் அமைப்புக்களை உள்ளடக்கியதாகும்.

    'கில்ராய் - அவரது கட்டுரையின் சில வாசகங்களுக்காக வருந்துவதாகத்தான் அவரது அறிக்கை வெளிவந்துள்ளது. மாறாக அவர் தனது முழு கட்டுரைக்கும் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட வேண்டும்' என்று இக்பால் பிபிசி க்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் 'அக்கட்டுரை முழுமையாக இன மாச்சரியத்தை வெளிப்படுத்துவதால், அதற்காக வருத்தம் தெரிவிப்பதே இவ்விஷயத்தில் முஸ்லிம்களை அமைதிப்படுத்துவதுடன், இதுபோன்றவை எதிர்காலத்தில் மீண்டும் தலை தூக்காமல் இருக்க அனைவருக்கும் பாடமாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.

    இந்நிலையில் அக்கட்டுரை இனவாதத்தை வலியுறுத்தவில்லை எனவும் இக்கட்டுரை சட்ட வல்லுனர்களின் கருத்தறிந்த பின்பே பிரசுரிக்கப்பட்டதாகவும் எனவே இதில் எந்த வழக்கோ, சிக்கலோ இல்லையென்றும் சண்டே எக்ஸ்பிரஸின் நாளிதழ் பதிப்பான டெய்லி எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

    கில்ராய் தனது கட்டுரையில் அரபு நாடுகளிலிருந்து உலகம் பெற்ற நன்மைகள் 'உண்மையில் எண்ணெய் வளம் அல்லாது எந்த வகையில் அரபல்லாத மற்றவர்கள் பயன் பெற்றுள்ளார்கள். அதுவும் கூட எண்ணெயை கண்டு பிடித்துக் கொடுத்து, அதன் உற்பத்தியில் பங்கு பெற்று பின்னர் அதற்கான விலையும் கொடுத்துத் தான் மேற்குலகம் அதனை பெறுகிறது. அதல்லாமல் பயனுள்ள வேறு பங்களிப்பு அல்லது விலை மதிப்புள்ள பங்களிப்பு எதையேனும் அளித்துள்ளதா? (ஒன்றுமில்லை)' என்று தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

    இக்கருத்தை சமூக சம்த்துவ பேரவைத் தலைவர் 'ட்ரவர் ஃபிலிப்' அவர்கள் 'பைத்தியக்காரத்தனமானது' என கடுமையாக விமர்சித்துள்ளார்.

    கில்ராய் ஸில்க் தனது மன்னிப்புக் கோரும் அறிக்கையில் 'ஈராக் போரைத் தொடர்ந்து எழுந்துள்ள எதிர்ப்பாளர்களின் அரபு நாடுகளின் மேற்குலக எதிப்புக்கான பதிலாகத்தான் அவ்வாறு குறிப்பிட்டிருந்ததாகவும், அதிலும் சில அரபு நாடுகள் என்றே எழுதியுள்ளதாகவும் அரபுகள் என்று குறிப்பிடவில்லை' என்றும் கூறியுள்ளார்.
மேலும், இக்கருத்து எழுதப்பட்டதற்கு மாற்றமாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதால் தான் மிகுந்த வருத்தம் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்   

இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்