2.குஷ்டரோகி, வழுக்கைத் தலையன், குருடர்

இன்டெக்ஸ்

நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Unicode Page

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்ரவேலர்களைச் சார்ந்த குஷ்டரோகி, வழுக்கைத் தலையன், குருடர் ஆகிய மூவரையும் அல்லாஹுத்தஆலா சோதிக்க நாடினான். அவர்களிடத்தில் வானவரை அனுப்பி வைத்தான். அவர் குஷ்டரோகியிடம் வந்தார். உனக்கு மிகவும் விருப்பமானது எது? என்று கேட்டார். (அதற்கு) அழகான நிறமும், அழகான மேனியும் வேண்டும். மக்களெல்லாம் என்னைக் குறையாகக் கருதுகிறார்களே அதுவும் என்னை விட்டுப் போக வேண்டும் என்றான். உடனே அவனைத் தடவி விட்டார். அவனது குறை அவனை விட்டும் போய் விட்டது. அழகான நிறமும் வழங்கப்பட்டான். உனக்கு எந்தப் பொருள் (செல்வம்) பிடிக்கும்? என்று கேட்டார். 'ஒட்டகம்' என்றான். கர்ப்பமுள்ள ஒட்டகம் வழங்கப்பட்டான். 'அதில் அல்லாஹ் உனக்கு அபிவிருத்தி (பரகத்) செய்வானாக' என்று கூறினார்.

வழுக்கைத் தலையனிடம் வந்து உனக்கு விருப்பமானது எது? என்று அவ்வானவர் கேட்டார். அழகான முடி வேண்டும். மக்களெல்லாம் என்னைக் குறையாகக் கருதுகின்றனர். அது என்னை விட்டுப் போக வேண்டும் என்றான். உடனே அவனைத் தடவி விட்டார். அவனது குறை அவனை விட்டும் போய் விட்டது. அழகான முடியும் வழங்கப்பட்டான். உனக்கு எந்தப் பொருள் (செல்வம்) பிடிக்கும்? என்று கேட்டார். 'பசுமாடு' என்றான். கர்ப்பமுள்ள பசுமாடு வழங்கப்பட்டான். 'அதில் அல்லாஹ் உனக்கு அபிவிருத்தி செய்வானாக' என்று கூறினார்.

குருடரிடம் வந்து உனக்கு விருப்பமானது எது? என்று அவர் கேட்டார். அவர் எனக்கு பார்வையைத் திருப்பித் தர வேண்டும். நான் மக்களைப் பார்க்க வேண்டும் என்று கூறினான். உடனே அவரைத் தடவி விட்டார். அல்லாஹ் அவருக்கு பார்வையைத் திருப்பிக் கொடுத்தான். உனக்கு எந்தப் பொருள் (செல்வம்) பிடிக்கும்? என்று கேட்டார். 'ஆடு' என்றார். குட்டி போடக்கூடிய ஆடு வழங்கப்பட்டான். ஆக அம்மூன்றும் குட்டி போட்டன. எனவே முதலாமவனுக்கு ஒரு பள்ளத்தாக்கு நிறைய ஒட்டகம் உருவாகி விட்டது. இரண்டாமவனுக்கு பள்ளத்தாக்கு நிறைய பசுமாடு ஏற்பட்டு விட்டது. மூன்றாமவருக்கு பள்ளத்தாக்கு நிறைய ஆடுகள் ஏற்பட்டு விட்டது.

பின்னர் அதே வானவர் தமது பழைய தோற்றத்திலும், அமைப்பிலும் குஷ்டரோகியிடம் வந்தார். நான் ஏழ்மையானவன். என்னுடைய பிரயாணத்திற்கு உரியவைகள் எல்லாம் இல்லாமல் போய் விட்டது. எனவே இன்று அல்லாஹ்வுடைய உதவி கொண்டும், பிறகு உன்னுடைய உதவியைக் கொண்டும் தான் இன்றைக்கு எனக்குத் தேவையானவை கிடைக்கும். எனவே அழகான நிறத்தையும் அழகான மேனியையும் வழங்கிய அல்லாஹ்வைக் கொண்டு உன்னிடம் ஒரு ஒட்டகத்தையும் கேட்கிறேன். அதைக் கொண்டு என் பயணத்தில் (என் தேவைகளை) நிறைவு செய்து கொள்வேன் என்று கேட்டார். அதற்கு 'எனக்கு அதிகமான தேவைகள் உள்ளன' என்று அவன் கூறினான். உன்னை நான் நன்கு அறிவேன். மக்களெல்லாம் ஏழை என்றும் குஷ்டரோகி என்றும் உன்னை இழிவாக கருதவில்லையா?! அல்லாஹ் உனக்கு (நீ விரும்பியவற்றை) வழங்கினான்! என்று அந்த வானவர் அறிவுறுத்தினார். (அதற்கு அவன்) 'இந்த செல்வத்தை தலைமுறை தலைமுறையாக நான் பெற்றுள்ளேன்' என்றான். உடன் அவ்வானவர், 'நீ பொய்யனாக இருந்தால் அல்லாஹ் உன்னை பழைய நிலைக்கு மாற்றட்டும்' என்று கூறினார்.

பின்னர் அவர் தமது (பழைய) தோற்றத்திலும் அமைப்பிலும் வழுக்கைத் தலையனிடம் வந்தார். குஷ்டரோகியிடம் கோரியது போன்றே இவனிடமும் கோரினார். அவன் சொன்ன பதிலையே இவனும் சொன்னான். 'நீ பொய்யனாக இருந்தால் அல்லாஹ் உன்னை பழைய நிலைக்கு மாற்றட்டும்' என்றார்.
பின்னர் குருடரிடம் வந்தார். (நான்) ஏழ்மையான மனிதன், வழிப்போக்கன். என்னுடைய பிரயாணத்திற்கு உரியவைகள் எல்லாம் இல்லாமல் போய் விட்டது. எனவே இன்று அல்லாஹ்வுடைய உதவி கொண்டும், பிறகு உன்னுடைய உதவியைக் கொண்டும் தான் இன்றைக்கு எனக்குத் தேவையானவை கிடைக்கும். எனவே உனக்குப் பார்வையைத் திருப்பித் தந்தானே அவனை முன்வைத்து உன்னிடம் ஒரு ஆட்டைக் கேட்கிறேன். அதன் மூலம் என் பயணத்தில் (என் தேவைகளை) நிறைவு செய்து கொள்வேன் என்றார். அதற்கு அந்த குருடர், 'நான் பார்வையிழந்தவனாக இருந்தேன். அல்லாஹ் எனக்கு பார்வையைத் திருப்பித் தந்தான். எனவே நீ விரும்பியதை எடுத்துக் கொள்வீராக! நீர் விரும்பியதை விட்டு விடுவீராக! அல்லாஹ் மீது ஆணையாக இன்று அல்லாஹ்வுக்காக நீர் எதை எடுத்துக் கொண்டாலும், (அதற்காக) உம்மை தடுக்க மாட்டேன்' என்று கூறினார். (அதற்கு) அவர் உன் செல்வத்தை நீயே வைத்துக் கொள். 'நீங்கள் (மூவரும்) சோதிக்கப்பட்டீர்கள். அல்லாஹ் உம்மைப் பொருந்திக் கொண்டான். உமது இரு தோழர்களின் மீதும் கோபம் கொண்டான்' என்றார்.

(அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

விளக்கம்:

ஒன்றுக்குப் பல தடவை இச்செய்தியை நாம் படித்துப் பார்க்கிறோம். நிச்சயமாக இம்முடிவுக்கே நாம் வந்தாக வேண்டும்.

1. அல்லாஹ்தஆலா தனது அடியார்களை நிச்சயமாக சோதிப்பான். இவ்வுலகைப் பொருத்த அளவில் அவனது நடைமுறையும் அதுவே. இதை குர்ஆனில் பல இடங்களில் கூறுகின்றான்.

'உங்களில் நல்லறங்கள் புரிகின்றவர் யார்? என்று சோதிப்பதற்காக அவன் மரணத்தையும், வாழ்வையும் படைத்தான்' (அல்குர்ஆன் 61:2)

'ஒவ்வொரு உயிரும் மரணத்தை அனுபவிக்கக் கூடியதே. தீமையையும் நன்மையையும் கொண்டு உங்களை நாம் சோதிக்கிறோம். பின்னர் நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்' (அல்குர்ஆன் 21:35)

2. அல்லாஹ்தஆலாவின் சோதனை உடல், பொருள், குழந்தைகள் போன்ற அனைத்திலும் ஏற்படும்.

'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினால் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாறாயங் கூறுவீராக!' (அல்குர்ஆன் 2:155)

3. வானவர்கள் மனிதவடிவில், மனிதர்களிடம் வருகை தருவார்கள். அல்லாஹ்வின் அனுமதியுடன் நோயாளியை தடவிவிடுவதின் மூலம் அவர்களுக்கு நிவாரணம் அளிப்பார்கள். இப்படித்தான் நபி (ஸல்) அவர்களிடமும், ஏனைய நபிமார்களிடமும் வானவராகிய ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வருகை தந்தார்கள். நபி (ஸல்) அவர்களிடம் திஹ்யதுல் கல்பி (ரலி) அவர்களுடைய தோற்றத்தில் ஜிப்ரயீல் அவர்கள் வந்துள்ளார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

எனினும் மனித உருவில் வந்த மலக்குகளை நபிமார்களைத் தவிர வேறு யாரும் இனம் கண்டு கொள்ள முடியாது.

4. மனிதனுக்கு சொத்துக்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் நோய்வாய்ப்பட்டு விட்டால் தனக்கு ஏற்பட்ட நோய் குணமாக வேண்டுமே என்றுதான் அவன் விரும்புவான்.

அவ்வாறுதான் தங்களது குறை முதலில் நிவர்த்தியாக வேண்டும் என்று அம்மூவரும் கூறினர்.

5. அல்லாஹ்தான் ஒருவனுக்கு செல்வத்தையும் கொடுக்கிறான், கொடுக்காமலும் இருக்கிறான்.

'அல்லாஹ் தான் நாடியவருக்கு செல்வத்தை - ரிஸ்கை விசாலமாக்குகிறான். தான் நாடியவருக்கு சுருக்கிக் கொடுக்கிறான்' (அல்குர்ஆன் 13:26)

6. அல்லாஹ்தான் நோயிலிருந்து நிவாரணம் அளிப்பவன். இதுதான் ஒரு ஏகத்துவவாதியிடம், நல்ல பண்பாளனிடம் இருக்க வேண்டிய நம்பிக்கையாகும். அப்படித்தான் பார்வையை இழந்தவர் கூறினார்.

'நான் குருடனாக இருந்தேன். அல்லாஹ்வே எனது பார்வையைத் திருப்பித் தந்தான்' என்று கூறினார்.
இவ்வாறே நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறினார்கள்.

'நான் நோயுற்றால் அவனே என்னைக் குணப்படுத்துகிறான்' (அல்குர்ஆன் 26:80)

7. அறிவற்ற மனிதன் தனது செழுமையான காலகட்டத்தில் கஞ்சத்தனம் செய்கிறான். அறிவுள்ள மனிதனோ தனக்குரிய செல்வத்தை தானாக வழங்குகின்றான். நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியை இங்கு நாம் எண்ணிப் பார்க்கிறோம்.

'ஒவ்வொரு காலையிலும் அடியார்களிடம் இரண்டு மலக்குகள் இறங்குகிறார்கள். ஒருவர் அல்லாஹ்வே! (உன் வழியில்) (நபி வழியில்) செலவு செய்பவனுக்கு பிரதிபலன் வழங்குவாயாக! என்று கூறுகிறார். மற்றவர், அல்லாஹ்வே! (உன் வழியில்) செலவு செய்யாதவனுக்கு அழிவைக் கொடுப்பாயாக! என்று கூறுகிறார். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

8. செல்வந்தர்களில் சிலர் தங்களுடைய பழைய நிலையை எண்ணிப் பார்க்க தவறி விடுகின்றார்கள். அதை யாரேனும் நினைவூட்டினாலோ அவரின் மீதே எரிச்சலடைகின்றனர். தன்னிலை மறந்தவர்களாக பெருமையடிக்கின்றனர். எளியவர்களைக் கண்டாலோ ஏளனமாகக் கருதுகின்றனர். என்னே அவர்களின் அறியாமை!

செல்வந்தர்கள், தங்களுக்கு செல்வம் வந்த வழியை எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு தொழிலாளி நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி ஒரு நாளைக்கு பதினாறு மணி நேரம் மாடாய் உழைக்கின்றான். அவன் பொருளீட்டுவதோ சொற்பத் தொகைதான். வசதி படைத்தவன் சில மணித்துளிகள் சொகுசாக உழைக்கிறான். அவன் பொருளீட்டுவதோ அதிகம். என்ன வியப்பாக இருக்கிறதா? ஆம் இது மனித சக்திக்கு அப்பாற்பட்டது அல்லவா? அதனால் தான் அல்லாஹ் குர்ஆன் நெடுகிலும் 'தான் வழங்கிய செல்வம்' என்கின்றானோ!

'நம்பிக்கை கொண்டோரே! பேரங்களும் நட்புறவுகளும் பரிந்துரைகளும் இல்லாத அந்த (இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து செலவு செய்யுங்கள்..' (அல்குர்ஆன் 2:254)

'உங்களில் ஒருவருக்கு மரணம் வரும் முன்னரே நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து தான தர்மம் செய்யுங்கள்' (அல்குர்ஆன் 63:10)

இந்தப் பேருண்மையை அந்தக் குருடருடைய வாழ்க்கையில் பிரதிபலித்ததை நாம் கண்ணுற்றோம்.

9. அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளுக்கு யார் நன்றி செலுத்துகின்றாரோ, எளியவர்களுக்கு யார் தானமாக வழங்குகின்றாரோ அவருக்கு அல்லாஹ் மேலும், அதிகமாக வழங்குகிறான். அதில் அபிவிருத்தியையும் ஏற்படுத்துகின்றான். எவன் கஞ்சத்தனம் செய்கின்றானோ அவன் அல்லாஹ்வின் அருள் நீங்குவதற்குக் காரணமாகி விடுகின்றான். அவனுடைய கோபத்திற்குரியவனாகவும் ஆகிவிடுகின்றான்.

'நீங்கள் நன்றியுடனிருந்தால் நிச்சயமாக நான் (என் அருளை) அதிகமாக்குவேன். நீங்கள் மாறு செய்வீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானது'. (அல்குர்ஆன் 14:07)

அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி பாராட்டாதவனுக்கு நிச்சயமாக அவனது தண்டனை உண்டு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

காரூன் என்ற கொடியவன் மூஸா (அலை) அவர்களின் சமூகத்தைச் சார்ந்தவனாக இருந்தான். அவனுக்கு கணக்கிலடங்காத அளவுக்கு செல்வங்களைக் கொடுத்தான். அவன் வைத்த பொக்கிஷங்களின் சாவிகளை சுமப்பதற்கே பெருங்கூட்டம் தேவையென்றால் பாருங்களேன்.

அவனிடம் அல்லாஹ் உனக்கு வழங்கிய செல்வத்திற்காக அவனுக்கு நன்றி செலுத்த வேண்டாமா? அவற்றால் இவ்வுலகில் நல்ல பணிகள் செய்ய வேண்டாமா? அநியாயமும் அக்கிரமும் செய்யாமலிருக்க வேண்டாமா? என்றால் என்னுடைய அறிவின் காரணமாகத்தான் இச்செல்வம் எனக்குக் கிட்டியது என்று கர்வத்துடன் கூறினான்.

ஆணவங்கொண்ட அக்கொடியவனையும் அவனது செல்வத்தையும் அல்லாஹ் பூமியில் அழுந்தச் செய்தான். (கருத்து) (அல்குர்ஆன் 28:76-82)

இறையருள் வழங்கப்பெற்றோரே! ஒரு கணம் ஹாரூனின் அழிவை எண்ணிப் பாருங்கள்! ஒரு கட்டத்தில் அசத்திய வழியிலும், அனாச்சாரத்திலும் நம் பொருளை வாரி இறைத்தோமே அவைகளெல்லாம் விழலுக்கிறைத்த நீராய்த்தானே போனது. சத்திய வழியில், அறவழியில் அள்ளி இறைக்க வாருங்கள் என்றால் ஏன் ஓடி ஒளிந்து கொள்கிறீர்கள். அந்த காரூனுக்கு ஏற்பட்டது உங்களுக்கு ஏற்படாது என்ற அசட்டுத் துணிச்சலா?

'அநீதம் செய்வதை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அநீதம் செய்வது மறுமை நாளில் பெரும் இருளாக அமையும். கஞ்சத்தனத்தை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக கஞ்சத்தனம் உங்களுக்கு முன்னிருந்தவர்களை அழித்தது. தங்களுக்கிடையில் வெட்டிக் கொள்ளவும் தங்களுக்குத் தடுக்கப்பட்டவைகளை செய்யவும் தூண்டியது' (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), முஸ்லிம்)

10. உண்மை விசுவாசி தனது வாக்கை நிறைவேற்றுகிறான். தாரளமாக நடந்து கொள்கிறான். நயவஞ்சகனோ வாக்குறுதி அளிக்கிறான், ஆனால் அதை நிறைவேற்றுவதில்லை. அல்லாஹ் தஆலா கூறியது போன்று,

'அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும் தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்' (அல்குர்ஆன் 23:08)

நயவஞ்சகர்கள் குறித்து அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான். அவர்களில் சிலர், அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்தால் மெய்யாகவே நாம் (தாராளமாக தான) தர்மங்கள் செய்து, நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம் என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள்.

'(அவ்வாறே) அவன் அவர்களுக்குத் தன் அருட்கொடையிலிருந்து வழங்கிய போது, அதில் அவர்கள் உலோபித்தனம் செய்து, அவர்கள் புறக்கணித்தவர்களாக பின்வாங்கி விட்டனர்' (அல்குர்ஆன் 9:75,76)

நபி (ஸல்) அவர்களும் நயவஞ்சகர்களைக் குறித்து சொல்லிக் காண்பிக்கிறார்கள். நயவஞ்சகர்களின் அடையாளம் மூன்று. 1. பேசினால் பொய் பேசுவான். 2. வாக்களித்தால் மாறு செய்வான். 3. நம்பப்பட்டால் மோசடி செய்வான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

முதல் பக்கம்

அடுத்த பக்கம்   

இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம