உலகம் முழுவதற்கும் என்றென்றும் தேவையான போதனைகளைக் கொண்ட
அல்குர்ஆன், வானவர்களின் தலைவரான ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலமாக நபிகள்
பெருமானார் முஹம்மது ரஸுல் (ஸல்) அவர்களுக்கு இறைவன் அருளிய புனித மறையாகும்.
எழுதப் படிக்கத் தெரியாத அண்ணல் நபிகளார் வாயிலாக வெளிப்பட்டதே, இறைவனிடமிருந்து
வந்த வேதம் இது என்பதற்குச் சான்று.
இங்கிலாந்து நாட்டில் வோகிங் முஸ்லிம்
இயக்கத்தில் 1946-ஆம் ஆண்டு சோந்தேன். பைபிள் 692 மொழிகளில் மொழிபெயர்க்கப்
பட்டிருப்பதைப் போலவே, திருக்குர்ஆனையும் உலக மொழிகளில் வெளியிட வேண்டும் என்பதே
அன்றிலிருந்து என்னுடைய கனவாக இருந்து வந்திருக்கிறது. முஸ்லிம்களில் பலர் அரபி
மொழி அறியாதவர்கள், திருக்குர்ஆனில் பொதிந்துள்ள ஞானங்களை அவர்கள் பெற, அதனைப்
பல்வேறு நாட்டு மொழிகளிலும் வெளியிட வேண்டுவது அவசியம் ஆகும். இரங்கூனிலுள்ள
பர்மிய முஸ்லிம் கழகத்தின் உதவியோடு, 1979-ல் திருக்குர்ஆன் முழுவதையும் பர்மிய
மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டேன். தமிழிலும் அப்பணியை நிறைவேற்றுவதை
என்னுடைய அடுத்த இலட்சியமாகக் கொண்டேன்.
திருக்குர்ஆன் கூறும் உண்மைகளையும்
போதனைகளையும் திரிப்பதையும், சிதைப்பதையுமே நோக்கமாகக் கொண்டு ஸேல் என்ற
பாதிரியார் முதன் முதலாக திருக்குர்ஆனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். மவ்லானா
முஹம்மது அலி அவர்களுடைய ஆங்கில மொழிபெயர்ப்பு, 1917-ஆம் ஆண்டுதான் வெளிவந்தது.
அதற்குப் பின்னர் முஸ்லிம் அறிஞர்கள் பலர் இறைவனின் திருமறையை ஆங்கிலத்தில் மொழி
பெயர்த்துள்ளார்கள். அவற்றுள் அல்லாமா யூஸுஃப் அலீ அவர்களின் வெளியீடே
சிறந்ததாகப் போற்றப்படுகிறது. மக்கமா நகரில் அமைந்துள்ள உலக முஸ்லிம் லீகான
ராபிதா அங்கீகரித்துள்ள இம்மொழி பெயர்ப்பையே திருமறையின் தமிழாக்கத்திற்கு
அடிப்படையாகக் கொண்டிருக்கிறோம்.
அரபி மூலமும், தமிழ் மொழி பெயர்ப்பும்
ஒருங்கிணைந்த நூலை வெளியிட வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அப்பொழுது தான்
இறைவனின் சொல்லை அரபியிலே ஓதவும் அதன் கருத்துரையைத் தமிழில் விளங்கிக்
கொள்ளவும் இயலும். தமிழில் திருமறையின் கருத்துரைகளும் விரிவுரைகளும் முன்னரே
வெளிவந்திருக்கின்றன. எனினும் எளிய, இனிய தமிழில், குறைந்த விலையில்
வாசகர்களுக்கு இதனைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு,
கடந்த ஐந்தாண்டுகளாக இப்பணியில் ஈடுபட்டிருக்கிறோம். முதலில் இருவரும், பின்னர்
அஃப்ளலுல் உலமா மவ்லவி ஸதகத்துல்லாஹ் பாகவி (மர்ஹூம்) அவர்களும் இப்பணியை
மேற்கொண்டனர்.
அல்லாமா யூஸுஃப் அலி அவர்களின் ஆங்கில
மொழிபெயர்ப்பின் அடிப்படையில் தமிழாக்கம் அமைய வேண்டும் என்று நான்
விரும்பியதால் மவ்லானா எம். அப்துல் வஹ்ஹாப் சாஹிப் எம்.ஏ., பி.டிஹெச்.,
அவர்களின் உதவியை நாடினேன். இம்மொழிபெயர்ப்பு நிறைவு பெற அவர்கள் புரிந்த
உதவிக்கும், அதன் பின்னர், இதன் அச்சுப்பணியை மேற்பார்வையிடும் பொறுப்பைத்
திறம்பட நிறைவேற்றியதற்கும் என் மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களுடைய ஆக்கபூர்வமான உதவியின்றி இவ்வளவு விரைவில் இப்பணியை முடித்திருக்க
இயலாது.
தொழுகை நூல் ஒன்றைத் தமிழிலும், யாஸீன்
ஸுராவின் கருத்துரையைப் பல மொழிகளிலும் நம்முடைய டிரஸ்ட் இலவசமாக
வெளியிட்டிருப்பதைப் போலவே, திருக்குர்ஆனின் இம்மொழி பெயர்ப்பும்
தென்னிந்தியாவிலும் தமிழ் பேசப்படும் பிற பகுதிகளிலும் உள்ள
பள்ளிவாயில்களுக்கும் மதரஸாக்களுக்கும் இலவசமாக, தபால் செலவு கூட இல்லாமல்
அனுப்பப்படும். தங்களுக்கென்று தனியாக ஒரு பிரதி யாருக்கேனும் தேவைப்பட்டால்
அவர்கள் ரூ.40 (ரூபாய் நாற்பது மட்டும் தபால் செலவு தனி) அனுப்ப வேண்டும் என்று
நிர்ணயித்திருக்கிறோம். இந்நூலின் தயாரிப்புச் செலவை விட இது மிகவும் குறைவானது
என்பதைக் குறிப்பிட விரும்புகிறோம்.
இந்நூல் வெளிவருவதற்கு எங்களுக்கு
ஹிதாயத்தையும் உதவியையும் அருளிய எல்லாம் வல்ல அல்லாஹுதஆலாவுக்கு நன்றி
செலுத்துகிறோம். தமிழ் அறிந்த முஸ்லிம்கள் பலர் பயன்பெறும் விதத்தில், இன்னும்
அதிக அளவில் இதனை வருங்காலத்தில் அச்சிட அவனுடைய அருளை வேண்டுகிறோம்.
இப்பணியில் குற்றம், குறைகள் இருப்பின்
அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறோம். அவற்றைக் காண்பவர்கள், எங்களுக்குத்
தெரிவித்தால் அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்கிறோம், இன்ஷா அல்லாஹ்.
இந்நூல் வெளிவருவதற்குத் துணைபுரிந்த அனைவருக்கும் உளம் கனிந்த
நன்றி, புனித குர்ஆனின் கருத்துரைகளும் விரிவுரைகளும் மக்களிடையே பரவுவதற்காகப்
பாடுபடும் அனைவரின் ஈருலக நற்பேறுகளுக்காகவும் அல்லாஹுதஆலாவிடம் இறைஞ்சுகிறோம்.
தமிழறிந்த சகோதர, சகோதரியருக்கு இம்மொழி பெயர்ப்பு பெரிதும் பயன்படும் என்று
நம்புகிறோம். அவர்களுடைய இதயம் கனிந்த துஆவை வேண்டுகிறோம்.
டாக்டர் எஸ். முஹம்மது ஜான்
இந்த முன்னுரை 1983-ஆம் ஆண்டு முதற்பதிப்பின் போது
எழுதப்பட்டதாகும். இப்போது அதன் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பிரதிகள்
தேவைப்படுவோர் கீழ்காணும் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்:
ஹாஜி முஹம்மது ஜான் லிட்டரரி மற்றும் சாரிடபிள் டிரஸ்ட்
'பர்மா ஹவுஸ்'
97, பவளக்காரத் தெரு, சென்னை 600 001.